5 ஆண்டுகளுக்கு இந்திய ஆக்கி அணிகளுக்கு ஒடிசா அரசு ஸ்பான்சர்


5 ஆண்டுகளுக்கு இந்திய ஆக்கி அணிகளுக்கு ஒடிசா அரசு ஸ்பான்சர்
x
தினத்தந்தி 15 Feb 2018 9:15 PM GMT (Updated: 15 Feb 2018 8:42 PM GMT)

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் அளிக்க ஒடிசா மாநில அரசு ஆக்கி இந்தியா அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் அளிக்க ஒடிசா மாநில அரசு ஆக்கி இந்தியா அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய ஆக்கி அணிகளுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சீருடையை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் தன்ராஜ் பிள்ளை, திலிப் திர்கே, வீரென் ரஸ்குயின்ஹா மற்றும் இந்நாள் வீரர்–வீராங்கனைகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்–மந்திரி நவீன் பட்நாயக் பேசுகையில், ‘ஆக்கி இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வாய்ப்பை அளித்த ஆக்கி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆக்கி விளையாட்டு என்பதை காட்டிலும் ஒடிசாவில் மக்களின் வாழ்க்கையோடு ஒருங்கிணைந்ததாக விளங்கி வருகிறது. குறிப்பாக மலைவாழ் மக்கள் வசிக்கும் மண்டலங்களில் சிறுவர்கள் ஆக்கி மட்டையின் உதவியுடன் தான் நடப்பதையே கற்றுக்கொள்கிறார்கள் எனலாம்.

ஆக்கி ஆட்டத்தை இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் விரிவுபடுத்த உதவ வேண்டும். தேசிய விளையாட்டான ஆக்கி ஆட்டத்துக்கு எல்லா தரப்பு மக்களும் ஆதரவு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் ஆக்கி இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். தேசத்துக்கு, நாங்கள் அளிக்கும் பரிசு இதுவாகும்’ என்று தெரிவித்தார். இந்திய ஆக்கி அணிக்கு மாநில அரசு ஒன்று ஸ்பான்சர்ஷிப் அளிப்பது இதுவே முதல்முறையாகும்.


Next Story