அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு சர்தார்சிங் கேப்டன்


அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு சர்தார்சிங் கேப்டன்
x
தினத்தந்தி 20 Feb 2018 10:45 PM GMT (Updated: 20 Feb 2018 7:37 PM GMT)

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா, 2-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா, 6-வது இடத்தில் உள்ள இந்தியா, 7-வது இடம் வகிக்கும் இங்கிலாந்து, 10-வது இடத்தில் உள்ள அயர்லாந்து, 12-வது இடத்தில் இருக்கும் மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கமான கேப்டன் மன்பிரீத்சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த உலக ஆக்கி லீக் இறுதி சுற்று மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத சர்தார்சிங் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் சர்தார்சிங்கின் செயல்பாட்டை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும். போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் நிர்வாகத்தை ஈர்த்தால் மட்டுமே அவருக்கு அடுத்து வரும் காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் உலக கோப்பை போட்டியில் ஆடும் வாய்ப்பு கிட்டும். எனவே சீனியர் வீரரான சர்தார்சிங்கின் ஆட்டம் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் ஆளாகி இருக்கிறது. அணியின் துணை கேப்டனாக ரமன்தீப்சிங் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். மன்தீப் மோர், சுமித் குமார் ஜூனியர், ஷிலானந்த் லக்ரா ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சுரஜ் கார்கெரா, கிருஷ்ணன் பதாக், பின்களம்: அமித் ரோகிதாஸ், திப்சன் திர்கே, வருண்குமார், சுரேந்தர்குமார், நிலம் சன்ஜீப், மன்தீப் மோர், நடுகளம்: உத்தப்பா, சர்தார்சிங் (கேப்டன்), சுமித், நீலகண்ட ஷர்மா, சிம்ரன்ஜீத்சிங், முன்களம்: குர்ஜந்த் சிங், ரமன்தீப்சிங் (துணைகேப்டன்), தல்விந்தர்சிங், சுமித் குமார் ஜூனியர், ஷிலானந்த் லக்ரா.

Next Story