ஹாக்கி

தென்கொரியா ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ராணி ராம்பால் கேப்டன் + "||" + South Korea Hockey Series: Queen Rampal is the captain of Indian women's team

தென்கொரியா ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ராணி ராம்பால் கேப்டன்

தென்கொரியா ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணிக்கு ராணி ராம்பால் கேப்டன்
தென்கொரியா பயணத்துக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிப்பு.
புதுடெல்லி,

தென்கொரியா போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பெண்கள் ஆக்கி அணி, தென்கொரியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது.


தென்கொரியா பயணத்துக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுனிதா லக்ரா துணைகேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கோல்கீப்பர் சவிதாவுக்கு இந்த போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரஜனி எடிமர்பு மற்றும் அறிமுக வீராங்கனை ஸ்வாதி ஆகியோர் கோல்கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்த சீனியர் வீராங்கனை தீபிகா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

தென்கொரியா போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: ரஜனி எடிமர்பு, ஸ்வாதி. பின்களம்: தீபிகா, சுனிதா லக்ரா (துணை கேப்டன்), தீப் கிரேஸ் எக்கா, சுமன் தேவி தொடாம், குர்ஜித் கவுர், சுஷிலா சானு புக்ராம்பாம், நடுகளம்: மோனிகா, நமிதா டாப்போ, நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ், உதிதா, முன்களம்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர், பூனம் ராணி.

போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘சீசனின் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டியது எப்பொழுதும் முக்கியமானதாகும். சிறப்பாக செயல்பட்டால் இந்த ஆண்டின் எஞ்சிய போட்டிகளுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் எடுத்து செல்ல வழிவகுக்கும். காமன்வெல்த் விளையாட்டு போட்டி விரைவில் நடக்க இருக்கும் நிலையில் நடைபெறும் தென்கொரியா தொடர், நமது ஆட்டத்தில் ஏற்றம் காண வேண்டிய துறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய உதவிகரமாக இருக்கும். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்வதே நமது நோக்கமாகும். அனுபவம் வாய்ந்த தீபிகா, பூனம் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி இருப்பது நல்ல விஷயமாகும். அணி வீராங்கனைகள் உடல் தகுதிக்கான யோ-யோ டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார்கள். சமீபத்தில் நடந்த தேசிய ஆக்கி போட்டியில் பெரும்பாலான வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் அணிகளுக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அந்த சிறப்பான பார்மை தென்கொரியா பயணத்திலும் நமது வீராங்கனைகள் தொடருவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.