சுல்தான் ஷா ஆக்கி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா மோதல்


சுல்தான் ஷா ஆக்கி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா மோதல்
x
தினத்தந்தி 2 March 2018 9:15 PM GMT (Updated: 2 March 2018 8:27 PM GMT)

27-வது சுல்தான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 10-ந்தேதிவரை நடக்கிறது

இபோக்,

27-வது சுல்தான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 10-ந்தேதிவரை நடக்கிறது. இதில் 9 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மலேசியா, அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இன்றைய தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனான உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆகாஷ்தீப்சிங், சுனில், மன்தீப்சிங், மன்பிரீத்சிங், ருபிந்தர் பால் சிங், ஹர்மன்பிரீத்சிங், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இந்திய கேப்டன் சர்தார்சிங் இளம் வீரர்களை கொண்டு எப்படி சாதிக்கப்போகிறார் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவரது தலைமையில் இந்திய அணி சுல்தான் ஷா கோப்பை போட்டியில் பதக்கம் இன்றி தாயகம் திரும்பியது கிடையாது. 2008, 2016-ம் ஆண்டுகளில் வெள்ளிப்பதக்கமும், 2015-ம் ஆண்டில் அவரது தலைமையில் வெண்கலப்பதக்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்1 நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (மாலை 3.30 மணி), மலேசியா-அயர்லாந்து (மாலை 6 மணி) ஆகிய அணிகள் மோதும் ஆட்டமும் இன்று நடக்கிறது.

Next Story