அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்


அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 8 March 2018 10:45 PM GMT (Updated: 8 March 2018 7:46 PM GMT)

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி தொடரில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

இபோக்,

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

6 அணிகள் பங்கேற்றுள்ள 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா (பகல் 1.35 மணி), இந்தியா-அயர்லாந்து (மாலை 3.35 மணி), இங்கிலாந்து-மலேசியா (மாலை 6.05 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அயர்லாந்து அணி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.

இந்திய அணியை பொறுத்தமட்டில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருந்தாலும் இறுதிப்போட்டி வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டது என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்திய அணி இன்னும் இறுதிப்போட்டி வாய்ப்பில் லேசாக நீடிக்கிறது. அதாவது இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பெரிய வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடிக்க வேண்டும். அத்துடன் அடுத்த 2 ஆட்டங்களின் முடிவுகளும் இந்திய அணிக்கு சாதகமானதாக இருக்க வேண்டும். அப்படி நடந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க முடியும். ஒரு ஆட்டத்தின் முடிவு பாதகம் ஆனால் கூட இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழக்க நேரிடும்.

கடைசி லீக் ஆட்டம் அனைத்தும் இறுதிப்போட்டி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடியது என்பதால் எல்லா அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story