உலக கோப்பை ஹாக்கி: துவக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரிட்சை


உலக கோப்பை ஹாக்கி: துவக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரிட்சை
x
தினத்தந்தி 21 July 2018 1:48 AM GMT (Updated: 21 July 2018 1:48 AM GMT)

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் துவக்க ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. #WorldCupHockey

லண்டன்,

14வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் லண்டனில் இன்று துவங்க உள்ளது.  துவக்க ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை ஹாக்கி போட்டியில், 'நடப்பு சாம்பியன்' நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, அர்ஜென்டீனா, ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.

இதன்படி ‘ஏ’பிரிவில் - சீனா, கொரியா, இத்தாலி, நெதர்லாந்து அணிகளும்,  ‘பி’ பிரிவில் - இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா அணிகளும், ‘சி’ பிரிவில் - அர்ஜென்டீனா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் அணிகளும், ‘டி’ பிரிவில் - ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜப்பான், நியூசிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறிவிடும். ஒவ்வொரு பிரிவிலும் 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு 'பிளே-ஆப்' போட்டிகள் நடத்தப்படும். இதில் வெல்லும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். வரும் ஆகஸ்ட் 1, 2-ந்தேதி நடக்கும் காலிறுதியில் வெற்றி பெறும் அணிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கும் அரையிறுதியில் மோத உள்ளன. இறுதிப்போட்டி மற்றும்  3வது இடத்துக்கான போட்டிகள் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும்.

இதன்படி இந்திய அணி இன்று (ஜூலை 21) இங்கிலாந்துடனும், 26ம் தேதி அயர்லாந்துடனும், 29ம் தேதி அமெரிக்காவுடனும் மோத உள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளில் முதன்முறையாக 12 அணிகளில் இருந்து 16 அணிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பச்சை நிற மைதானத்தில் இருந்து புதிதாக நீல நிற மைதானமும், மஞ்சள் நிற பந்தும் பயன்படுத்தப்பட உள்ளது.

உலக தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இந்திய அணி, 7வது முறையாக உலக கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி, இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டில் 4வது இடம் பிடித்தது. சமீபத்தில் முடிந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தது.

முன்னதாக இந்திய அணி கடந்த 1974 உலகக் கோப்பையில் 4ம் இடம் பெற்றதே இதுவரை சாதனையாக உள்ளது. இந்திய அணியில் கேப்டன் ராணி ராம்பால், தீபிகா ஆகியோரே உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். அதே நேரத்தில் ஏனைய 16 வீராங்கனைகள் முதன்முறையாக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story