ஹாக்கி

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: அயர்லாந்து அணியிடம் இந்தியா தோல்வி + "||" + Women make the World Cup: Ireland team to defeat India

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: அயர்லாந்து அணியிடம் இந்தியா தோல்வி

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: அயர்லாந்து அணியிடம் இந்தியா தோல்வி
பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் அயர்லாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
லண்டன்,

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்திடம் தோல்வி கண்டது.

16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 16-வது இடத்தில் இருக்கும் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு 13-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை அந்த அணி வீராங்கனை அன்னா பிளானகன் கோலாக மாற்றினார்.

இந்திய அணியின் ஆட்டம் நேற்று எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை. இந்திய அணியினர் பதில் கோல் திருப்ப கிடைத்த சில வாய்ப்புகளை தவற விட்டனர். அத்துடன் இந்திய அணி 7 பெனால்டி கார்னர் வாய்ப்பையும் வீணடித்தது. இந்திய அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் அயர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்த அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை சுவைத்ததுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது.

தொடக்க லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்துடன் டிரா கண்டு இருந்த இந்திய அணி இதுவரை ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அமெரிக்காவையும், அயர்லாந்து அணி, இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு ஆட்டமும் 29-ந் தேதி நடக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி 7-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை பந்தாடி முதல் வெற்றியை பெற்றது. தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.