பெண்கள் உலக கோப்பை ஆக்கி அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிரா கண்டது இந்தியா, ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது


பெண்கள் உலக கோப்பை ஆக்கி அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிரா கண்டது இந்தியா, ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது
x
தினத்தந்தி 30 July 2018 11:15 PM GMT (Updated: 30 July 2018 9:31 PM GMT)

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக் காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்ட இந்திய அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.

லண்டன், 

16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் உள்ள அணியுடன் ‘பிளே-ஆப்’ (நாக்-அவுட்) சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த போட்டி தொடரில் ‘பி’ பிரிவில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அமெரிக்க அணி தரப்பில் மார்கஸ் பாலினோ 11-வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை தேடிக்கொடுத்தார். இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் 31-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பி போட்டியில் இருந்து வெளியேறாமல் இந்திய அணியை காப்பாற்றினார். இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அயர்லாந்து அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

‘ஏ’ பிரிவில் தென்கொரியா- சீனா அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக் கில் டிராவில் முடிந்தது. இதேபிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 12-1 என்ற கணக்கில் கோல் மழை பொழிந்து 3-வது வெற்றியை தனதாக்கியது.

‘பி’ பிரிவில் அயர்லாந்து அணி 2 வெற்றி (அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இங்கிலாந்திடம்) 6 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி ஒரு வெற்றி (அயர்லாந்துக்கு எதிராக), 2 டிராவுடன் (இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக) 5 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்றது.

இந்திய அணி 2 டிரா (இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (அயர்லாந்திடம்) 2 புள்ளிகள் பெற்றது. அமெரிக்க அணி 2 டிரா, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றது. இந்தியா, அமெரிக்கா அணிகள் சம புள்ளிகள் பெற்று இருந்ததால் கோல் வித்தியாசம் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் இந்திய அணி (2 கோல் அடித்து, 3 கோல் விட்டுக்கொடுத்து இருந்தது) முன்னிலை பெற்று 3-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் (நாக்-அவுட்) சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்க அணி (3 கோல் அடித்து 5 கோல் விட்டுக் கொடுத்து இருந்தது) தனது பிரிவில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது.

லீக் ஆட்டங்கள் முடிவில் நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. கால்இறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ (நாக்-அவுட்) சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்த இத்தாலியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற முடியும். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story