‘யோ-யோ டெஸ்ட்’ என்பது... -விளக்குகிறார் நிபுணர்


‘யோ-யோ டெஸ்ட்’ என்பது... -விளக்குகிறார் நிபுணர்
x
தினத்தந்தி 11 Aug 2018 1:34 PM GMT (Updated: 11 Aug 2018 1:34 PM GMT)

சமீபகாலமாக விளையாட்டுலகில், குறிப்பாக கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் விஷயமாக ‘யோ-யோ டெஸ்ட்’ இருக்கிறது.

அண்மைக் காலத்தில் சிறப்பாக விளையாடிவரும் கிரிக்கெட் வீரர்கள் அம்பத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் ஆகியோர் ‘யோ-யோ டெஸ்ட்’டில் தேர்வாகாமல் போனதாலேயே இங்கிலாந்து சென்ற அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

அதேநேரத்தில் ‘ஆக்கி இந்தியா’ அமைப்பால் நடத்தப்பட்ட கடைசி இரு ‘யோ-யோ டெஸ்ட்’களில் முதலிடத்தைப் பிடித்த நடுக்கள ஆக்கி வீரர் சுமித், காமன்வெல்த் போட்டியில் ஜொலிக்கவில்லை. அதன் விளைவாக, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், ‘யோ-யோ டெஸ்ட்’ அவசியமா, அதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அவற்றுக்குப் பதில் அளிக்கிறார், இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் அறிவியல் ஆலோசகர் ராபின் ஆர்க்கெல்...

‘யோ-யோ டெஸ்ட்’ என்பது என்ன?

அடிப்படையான ‘யோ- யோ டெஸ்ட்’ என்பது, 20 மீட்டர் தூரத்துக்குள் திரும்பத் திரும்ப ஓடுவது. மெதுவாக ஆரம்பிக்கும் இதன் வேகம், படிப்படியாக அதிகரிக்கும். கடைசி இரு முறைகளில் மிக வேகமாக ஓட வேண்டும். அப்போதுதான் நாங்கள் மிகவும் கவனமாகக் கண்காணிப்போம். இப்போதைக்கு இந்திய ஆக்கி ‘யோ- யோ டெஸ்ட்’டில் நல்ல நிலையில் இருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நாம் பிட்னசில் மேலும் முன்னேறியிருக்கிறோம்.

‘யோ-யோ டெஸ்ட்’ அடிப்படையில் ஓர் அணிக்கு வீரர் ஒருவரை தேர்வு செய்வது அல்லது நிராகரிப்பது சரியானதா?

இதில் ஒரு சமநிலை வேண்டும். நன்றாக ஆக்கி விளையாட பல்வேறு விஷயங்கள் வேண்டும் என்பது வெளிப்படை. ஆக்கியில் உடல்தகுதி ரொம்ப முக்கியம்தான். ஆனால் ‘யோ-யோ டெஸ்ட்’தான் எல்லாம் என்று நான் சொல்ல மாட்டேன். விளையாட்டுக்கான இயல்பான திறமைகள் வேண்டும், அவற்றை களத்தில் வெளிப்படுத்த வேண்டும். அதிலும் சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட, ஒரு குறிப்பிட்ட அளவிலான திறன் அவசியம்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்ப ‘யோ-யோ டெஸ்ட்’ மாறுமா?

எந்த விளையாட்டு என்றாலும் இந்த டெஸ்ட் ஒரே மாதிரிதான்.

ஒரு வீரர் இந்த டெஸ்ட்டில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்ச அளவு என்று எதுவும் உண்டா?

அப்படி இல்லை. இந்த டெஸ்ட்டில் வீரர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகபட்ச ஸ்கோரை பெற வேண்டும் என்றே நாங்கள் எண்ணுகிறோம். தாக்குதல், நடுக்களம், தடுப்பு, கோல்கீப்பர் என்று வீரர்கள் எந்த நிலையில் ஆடுகிறார்கள் என்றும் பார்க்கிறோம். கோல் கீப்பருக்குத் தேவையான திறனுக்கும் நடுக்கள வீரருக்கான திறனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதேபோலத்தான், தடுப்பு வீரருக்கும், முன்கள வீரருக்கும்.

இந்திய ஆக்கி அணியில் உடல்தகுதி அடிப்படையில் வீரர்களை தரவரிசைப்படுத்தும்படி உங்களைச் சொன்னால்...?

அப்படி எதுவும் எண்கள் இட்டு என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் காணலாம் என்று மட்டும் சொல்வேன். எப்போதுமே மேலும் மேலும் முன்னேறுவதற்கு இடமுண்டு. நான் இந்திய அணிக்கு வந்ததில் இருந்து, இங்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. உலகக் கோப்பையின்போது உடல்தகுதியில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இந்திய அணியின் தயாரிப்பில் உங்கள் பங்கு பற்றி?

அணியின் அறிவியல் ஆலோசகராக, ஒரு வீரர் உடல்ரீதியாக எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார் என்று நான் கவனிக்கிறேன். உடல் வலுவை மேம்படுத்தும் ஜிம் பயிற்சிகள், பொது உடல்தகுதி, காயமடைவதைத் தவிர்ப்பது, வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக, வேகத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நீங்கள் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து?

வலு, வேகம், பொது உடல்திறன், தாக்குப்பிடிக்கும் திறன் என்று நாங்கள் சில பிரிவுகள் வைத்திருக்கிறோம். இவற்றில் தொடர்ச்சியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதைக் கவனிக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திய உணவுக் கலாசாரத்தின் காரணமாக நீங்கள் எதுவும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததா?

நாங்கள் இந்திய வீரர்கள் உண்ணும் உணவைக் கவனித்துச் சில மாற்றங்கள் செய்தோம். அந்த மாற்றம் சமீபத்தில்தான் செய்யப்பட்டது. எனவே அதனால் ஏற்படும் முன்னேற்றத்தை இனி வரும் மாதங்களில் காணலாம் எனக் கருதுகிறோம்.

என்ன மாதிரியான மாற்றங்கள் செய்தீர்கள்?

உண்ணும் உணவு தொடர்பாக வீரர்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்த முயல்கிறோம். வீரர்கள் எதை, எப்போது சாப்பிடுகிறார்கள் என்று நாங்கள் கவனித்தோம். அது ரொம்ப முக்கியமான விஷயம். வீரர்களுக்கான உணவில் புரதத்தை அதிகரித்திருக்கிற நாங்கள், வீரர்கள் உட்கொள்ளும் சர்க்கரை, உப்பின் அளவைக் குறைத்திருக்கிறோம். அவர்கள் காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும், சரியான அளவில் இறைச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இதெல்லாம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒரு வீரர், விளையாட்டில் அசாதாரணத் திறமை பெற்றிருந்தும் ‘யோ-யோ டெஸ்ட்’டில் தேர்ச்சி பெறத் தவறினால்...?

அவர் சில தனிப்பட்ட பயிற்சி முறைகளில் ஈடுபட வேண்டும், உடல்தகுதி பெற கூடுதலாக உழைத்து ஒரு குறிப்பிட்ட நிலையை எட்ட வேண்டும். நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட உடல்தகுதி நிலையில் இருந்தால்தான் ஒரு வீரரால் நன்றாக விளையாட முடியும். 

Next Story