பேட்மிண்டனில் சிந்து, சாய்னா அரைஇறுதிக்கு முன்னேற்றம ஆண்கள் ஆக்கியில் இந்தியாவுக்கு 4-வது வெற்றி


பேட்மிண்டனில் சிந்து, சாய்னா அரைஇறுதிக்கு முன்னேற்றம ஆண்கள் ஆக்கியில் இந்தியாவுக்கு 4-வது வெற்றி
x
தினத்தந்தி 26 Aug 2018 11:52 PM GMT (Updated: 26 Aug 2018 11:52 PM GMT)

ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். வில்வித்தை போட்டியிலும் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைக்க இருக்கிறது.

ஜகர்தா,

ஆசிய விளையாட்டில் வில்வித்தை போட்டியில் பெண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் முஸ்கன் கிரார், மதுமிதா குமாரி, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி கால்இறுதியில் 229-224 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவையும், அதைத் தொடர்ந்து அரைஇறுதியில் 225-222 என்ற புள்ளி கணக்கில் சீனதைபேயையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்த பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது நிச்சயமாகியுள்ளது. இந்திய பெண்கள் அணி இறுதி சுற்றில் தென்கொரியாவை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறது.

இதே போல் ஆண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் ரஜத் சவுகான், அமான் சைனி, அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய இந்திய குழு முதல் சுற்றில் 227-213 என்ற புள்ளி கணக்கில் கத்தாரையும், கால்இறுதியில் 227-226 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்சையும், அரைஇறுதியில் 231-227 என்ற புள்ளி கணக்கில் சீனதைபேயையும் வீழ்த்தியது. இதனால் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிட்டுவது உறுதியாகியுள்ளது. இந்த பிரிவிலும் இந்திய அணி பலம் வாய்ந்த தென்கொரியாவைத் தான் இறுதிசுற்றில் நாளை எதிர்கொள்ளப் போகிறது.

பேட்மிண்டனில், பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோனை விரட்டியடித்தார். இதையடுத்து சாய்னாவுக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியிருக்கிறது. ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். காமன்வெல்த் சாம்பியனான சாய்னா நேவால் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன் புயல்’ தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) இன்று பலப்பரீட்சை நடத்துகிறார். வலுமிக்க வீராங்கனையான தாய் ஜூ யிங்குக்கு எதிராக கடைசியாக மோதிய 9 சர்வதேச ஆட்டங்களில் சாய்னா தொடர்ச்சியாக தோற்று இருப்பது நினைவு கூரத்தக்கது.

மற்றொரு கால்இறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-11, 16-21, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலை 1 மணி நேரம் போராடி வெளியேற்றினார். பதக்கத்தை உறுதி செய்திருக்கும் சிந்து அரைஇறுதியில் அகானே யமாகுச்சியுடன் (ஜப்பான்) மோதுகிறார்.

பி.வி.சிந்து கூறுகையில், ‘பதக்கத்தை உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எங்கள் பணி இன்னும் முடிந்து விடவில்லை. அந்த பதக்கம் இன்னும் சிறப்புக்குரியதாக இருக்க வேண்டும். இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய மங்கைகள் சந்தித்தால் அது இந்திய பேட்மிண்டனுக்கு நல்ல விஷயமாக இருக்கும். அது நடக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா இதுவரை 8 வெண்கலப்பதக்கம் (அணிகள் பிரிவில் 6, ஆண்கள் இரட்டையரில் ஒன்று மற்றும் 1982-ம் ஆண்டு ஜாம்பவான் சையத் மோடி ஆண்கள் ஒற்றையரில் வென்ற ஒரு பதக்கம்) மட்டுமே வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) 5-3 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பதம் பார்த்தது. இந்திய அணியில் முதல் நிமிடத்தில், பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ருபிந்தர்பால் சிங் கோல் அடித்தார். தொடர்ந்து சிங்லென்சனா, லலித் உபத்யாய், மன்பிரீத்சிங், ஆகாஷ்தீப்சிங் ஆகியோரும் இந்திய அணியில் கோல் போட்டனர்.

தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி இதன் மூலம் அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் இலங்கையுடன் நாளை மோதுகிறது.

குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனையான மணிப்பூரைச் சேர்ந்த சர்ஜூபாலாதேவி 5-0 என்ற புள்ளி கணக்கில் மதினா காபோரோவாவை (தஜிகிஸ்தான்) வீழ்த்தி கால் இறுதியை எட்டினார்.

ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனோஜ்குமார் 0-5 என்ற புள்ளி கணக்கில் அப்துராக்மானிடம் (கிர்கிஸ்தான்) வீழ்ந்தார். இதே போல் 60 கிலோ பிரிவில் மற்றொரு இந்திய முன்னணி வீரர் ஷிவ தபா, சீனாவின் ஜூன் ஷானுடன் கோதாவில் இறங்கினார். இதில் ஜூன் ஷான் விட்ட குத்துகளில் ஷிவ தபா நிலைகுலைந்தார். இதனால் முதல் ரவுண்டிலேயே ஆட்டத்தை நிறுத்திய நடுவர், ஜூன் ஷான் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் இந்திய அணி 23-25, 22-25, 25-23, 20-25 என்ற செட் கணக்கில் ஜப்பானிடம் தோற்று கால்இறுதி வாய்ப்பை இழந்தது.

ஆசிய விளையாட்டில் அறிமுக ஆட்டமாக இடம் பெற்றுள்ள பிரிட்ஜ் (சீட்டாட்டம்) போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், இந்திய கலப்பு அணியும் அரைஇறுதியில் நேற்று தோல்வி அடைந்தது. ஆனாலும் அரைஇறுதி வரை முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு இவ்விரு பிரிவுகளிலும் வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

Next Story