இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு 4-வது வெற்றி


இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு 4-வது வெற்றி
x
தினத்தந்தி 27 Aug 2018 10:45 PM GMT (Updated: 27 Aug 2018 8:51 PM GMT)

ஆசிய விளையாட்டின் பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-வது வெற்றியை ருசித்தது.

ஜகர்தா,

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் அணிகள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மக்காவ் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர்கள் அமல்ராஜ், ஹர்மீத் தேசாய், மன் தாக்கர் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர். பின்னர் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வியட்நாமை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி வீரர்கள் ஹர்மீத் தேசாய், சரத்கமல், சத்யன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இதன் பெண்கள் அணிகள் பிரிவில் கால்இறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் ஹாங்காங்கிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.

பெண்கள் ஆக்கி போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. இந்திய அணியில் கேப்டன் ராணி ராம்பால் 3 கோலும், மோனிகா, நவ்ஜோத் கவுர் தலா ஒரு கோலும் அடித்தனர். தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்த இந்திய அணி 12 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. லீக் ஆட்டங்களில் இந்திய அணி மொத்தம் 38 கோல்கள் அடித்து இருக்கிறது. தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் ஒரே ஒரு கோல் வாங்கியது. நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பெற்ற சீனாவுடன் மோதுகிறது.

குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அகமதுவை சாய்த்து கால்இறுதிக்குள் கால் பதித்தார். விகாஸ் கிருஷ்ணன் 2010-ம் ஆண்டில் தங்கப்பதக்கமும், 2014-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும் இந்த போட்டியில் வென்று இருந்தது நினைவுகூரத்தக்கது.

இதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்கல் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் கார்க்ஹூ எங்மன்டாக்கை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீரஜ் ரான்ஜி 3-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தான் வீரர் கோபாஷிவ் நுர்லானை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் 2-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் கார்க்ஹூ எங்க் அமரிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவையும், 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரையும் தோற்கடித்தது. இதன் பெண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஈரானை விரட்டியடித்தது.

Next Story