ஹாக்கி

ஆசிய விளையாட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் 4 பதக்கம் உறுதி + "||" + Indian women qualify for the final score Boxing, squash match 4 medals confirmed

ஆசிய விளையாட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் 4 பதக்கம் உறுதி

ஆசிய விளையாட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் 4 பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஜகர்தா, 

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குத்துச்சண்டை மற்றும் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தலா 2 பதக்கங்களை உறுதி செய்தது.

அமித், விகாஸ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் குத்துச்சண்டையில் நேற்று நடந்த ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் அமித் பன்ஹால், வடகொரியா வீரர் கிம் ஜாங் ரையோங்கை சந்தித்தார். இதில் அரியானாவை சேர்ந்த 22 வயதான அமித் பன்ஹால் 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.

இதேபோல் ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் இடது கண்ணுக்கு மேல் பகுதியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 3–2 என்ற கணக்கில் போராடி சீனாவின் டோஹிட்டா எர்பிகேவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் வெண்கலப்பதக்கத்தை உறுதிப்படுத்தினார். அத்துடன் அரியானாவை சேர்ந்த 26 வயதான விகாஸ் கிருஷ்ணன் தொடர்ச்சியாக 3 ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 2010–ம் ஆண்டில் தங்கப்பதக்கமும், 2014–ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தார். ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் தீரஜ் 0–5 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் ஜின்கோரிக்கிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

சரத்கமல்–மனிகா பத்ரா ஜோடிக்கு வெண்கலம்

பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சர்ஜூபாலா தேவி 0–5 என்ற கணக்கில் சீனாவின் யான் சாங்கிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் இந்த போட்டி தொடரில் குத்துச்சண்டை பெண்கள் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் குத்துச்சண்டை 2010–ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட பிறகு இந்தியா பதக்கம் வெல்லாமல் வெறுங்கையுடன் திரும்புவது இதுவே முதல்முறையாகும்.

டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு கால்இறுதியில் இந்தியாவின் சரத் கமல்–மனிகா பத்ரா ஜோடி 3–2 என்ற கணக்கில் வடகொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. பின்னர் நடந்த அரைஇறுதிப்போட்டியில் சரத்கமல்–மனிகா பத்ரா இணை 9–11, 5–11, 13–11, 4–11, 8–11 என்ற செட் கணக்கில் சீனாவின் சுகின் வாங்–யின்ஷா சன் ஜோடியிடம் தோல்வி கண்டது. இருப்பினும் சரத் கமல்–மனிகா பத்ரா ஜோடிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. சரத் கமல் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணிகள் வெற்றி

ஸ்குவாஷ் பெண்கள் அணிகள் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 3–0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இந்திய அணியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனன்யா குருவில்லா ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர். தொடர்ந்து 4–வது வெற்றியை ருசித்த இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. இதனால் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

ஸ்குவாஷ் ஆண்கள் அணிகள் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது. இதில் சவுரவ் கோ‌ஷல், ரமித் தாண்டன், மகேஷ் மங்கோன்கர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3–0 என்ற கணக்கில் தாய்லாந்தை விரட்டியடித்து 4–வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

பெண்கள் ஆக்கி அணி அசத்தல்

பெண்கள் ஆக்கி போட்டியில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா–சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் வெற்றிக்கான கோலை (52–வது நிமிடம்) அடித்தார். 1998–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது முதல்முறையாகும். நாளை நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஜப்பானை சந்திக்கிறது.