இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு வெள்ளிப்பதக்கம் இறுதிப்போட்டியில் ஜப்பானிடம் தோல்வி


இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு வெள்ளிப்பதக்கம் இறுதிப்போட்டியில் ஜப்பானிடம் தோல்வி
x
தினத்தந்தி 31 Aug 2018 9:15 PM GMT (Updated: 31 Aug 2018 9:11 PM GMT)

ஆசிய விளையாட்டில் பெண்கள் ஆக்கி போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஜப்பானும் நேற்று கோதாவில் இறங்கின.

ஜகர்தா, 

ஆசிய விளையாட்டில் பெண்கள் ஆக்கி போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஜப்பானும் நேற்று கோதாவில் இறங்கின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 11-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானின் மினாமி ஷிம்ஜூ கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் இந்தியா பதில் கோல் திருப்பியது. சக வீராங்கனை நவ்னீத் கவுர் தட்டிக்கொடுத்த பந்தை கோல்கம்பம் அருகே நின்ற இந்தியாவின் நேஹா கோயல் அழகாக வலைக்குள் திருப்பினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது.

பிற்பாதியில் இரு அணி வீராங்கனைகளும் மேலும் ஆக்ரோஷமாக ஆடினர். 44-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜப்பான் கேப்டன் மோட்டோமி கவாமுரா கோலாக்கினார். பதிலடி கொடுக்க இந்திய வீராங்கனைகள் இறுதிகட்டத்தில் கடுமையாக மல்லுகட்டினர். ஆனால் ஜப்பான் வீராங்கனைகள் இந்தியாவின் முயற்சியை முறியடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றிக்கனியை பறித்து, முதல்முறையாக தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தனர்.

தோல்வி அடைந்த இந்தியா வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஆசிய விளையாட்டு பெண்கள் ஆக்கியில் இந்தியா 1982-ம் ஆண்டு மட்டுமே தங்கம் வென்றிருந்தது. 36 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வாகை சூடும் கனவுடன் காத்திருந்த இந்திய மங்கைகளின் கனவை ஜப்பான் தகர்த்து விட்டது. இதில் வெற்றி பெற்றிருந்தால் இந்திய பெண்கள் அணி 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும். அந்த வாய்ப்பும் நழுவிப்போனது.

ஆண்கள் ஆக்கியில் இன்று நடக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதன் இறுதி ஆட்டத்தில் ஜப்பான்-மலேசியா அணிகள் மோத உள்ளன.

Next Story