ஹாக்கி

சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு + "||" + From international competition Indian veteran Sardar Singh retires

சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு

சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து இந்திய வீரர் சர்தார் சிங் ஓய்வு
சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஆக்கி அணி வீரர் சர்தார் சிங் தெரிவித்தார்.

முன்னாள் கேப்டன் சர்தார் சிங்

இந்திய ஆக்கி அணியின் முன்னணி நடுகள வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் 2006–ம் ஆண்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

அரியானாவை சேர்ந்த 32 வயதான சர்தார் சிங் இதுவரை 350 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். 2008–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். கடந்த முறை தங்கப்பதக்கம் வென்று இருந்த இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறை வெண்கலப்பதக்கம் தான் பெற்றது. சர்தார் சிங் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

ஓய்வு பெற முடிவு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமனில் அடுத்த மாதம் (அக்டோபர்) 18–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கான பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் வருகிற 16–ந் தேதி முதல் அக்டோபர் 14–ந் தேதி வரை நடக்கிறது. தேசிய பயிற்சி முகாமுக்கான 25 வீரர்கள் பட்டியலை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. இதில் சர்தார் சிங் பெயர் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் சர்தார் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் போதுமான அளவுக்கு ஆக்கி விளையாடி விட்டேன். 12 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். வரும் தலைமுறையினருக்கு வழி விடுவதற்கு இதுவே சரியான தருணமாகும். எனது குடும்பத்தினர் மற்றும் ஆக்கி இந்தியா நிர்வாகிகள், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். ஆக்கியை தவிர்த்து எனது வாழ்க்கையை சிந்திக்க இது சரியான நேரமாக கருதுகிறேன்.

உடல் தகுதி காரணம் இல்லை

ஓய்வு முடிவு எடுக்க எனது உடல் தகுதி காரணம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடக்கூடிய உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டம் உண்டு. வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இது தான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது ஓய்வு முடிவை தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கு தெரிவித்து விட்டேன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சர்தார் சிங் டெல்லியில் நாளை ஓய்வு முடிவை முறைப்படி அறிவிப்பார் என்று தெரிகிறது. 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை விளையாட ஆர்வமாக இருப்பதாக சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்த சர்தார்சிங் கட்டாயத்தின் பேரில் ஓய்வு முடிவுக்கு வந்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய பயிற்சி முகாமுக்கான வீரர்கள் பட்டியலில் உங்களுக்கு இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவுக்கு வந்தீர்களா? என்ற கேள்விக்கு சர்தார் சிங் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

அர்ஜூனா விருது பெற்றவர்

அரியானா போலீஸ் துறையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சர்தார் சிங் 2 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். 2012–ம் ஆண்டில் அர்ஜூனா விருதையும், 2015–ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.