அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் ரெயில்வே–இந்தியன் ஆயில்


அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் ரெயில்வே–இந்தியன் ஆயில்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:30 PM GMT (Updated: 15 Sep 2018 7:31 PM GMT)

சென்னையில் நடைபெறும் அகில இந்திய ஆக்கி போட்டியில் ரெயில்வே, இந்தியன் ஆயில் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

சென்னை, 

சென்னையில் நடைபெறும் அகில இந்திய ஆக்கி போட்டியில் ரெயில்வே, இந்தியன் ஆயில் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

ரெயில்வே அணி அபாரம்

92–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே–பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரெயில்வே அணி 4–0 என்ற கோல் கணக்கில் சிந்து வங்கி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரெயில்வே அணியில் நீலகண்ட ‌ஷர்மா 8–வது நிமிடத்திலும், ஹர்சஹிப் சிங் 14–வது மற்றும் 31–வது நிமிடத்திலும், ரஜின் கந்துலா 36–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கடைசி வரை போராடிய பஞ்சாப் சிந்து வங்கி அணியினரால் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.

இந்தியன் ஆயில் அணி வெற்றி

2–வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய ராணுவம்–இந்தியன் ஆயில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ராணுவ அணி 3–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் பின்பாதி ஆட்டத்தில் ஆக்ரோ‌ஷமாக ஆடிய இந்தியன் ஆயில் அணி அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து அசத்தி சரிவில் இருந்து மீண்டது. முடிவில் இந்தியன் ஆயில் அணி 5–4 என்ற கோல் கணக்கில் ராணுவ அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தியன் ஆயில் அணியில் அர்மான் குரேஷி 4–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தியும், 42–வது நிமிடத்தில் பீல்டு கோலும் அடித்தார். குர்ஜித் சிங் 54–வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பிலும், 61–வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பிலும் கோல் திணித்தார். 63–வது நிமிடத்தில் அபான் யூசுப் பீல்டு கோல் அடித்தார். ராணுவ அணி தரப்பில் சஜீப் டுங் 20–வது நிமிடத்திலும், பிரஜ் எக்கா 27–வது நிமிடத்திலும், சஞ்சய் தோப்போ 32–வது நிமிடத்திலும், குர்பிரீத் சிங் 50–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இன்று இறுதிப்போட்டி

இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ரெயில்வே–இந்தியன் ஆயில் அணிகள் மோதுகின்றன.


Next Story