ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 4-வது வெற்றி


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 4-வது வெற்றி
x
தினத்தந்தி 25 Oct 2018 10:12 PM GMT (Updated: 25 Oct 2018 10:12 PM GMT)

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது.

மஸ்கட்,

5-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்ட இந்திய அணியில், 5-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார். அதன் பிறகு இந்திய வீரர் குர்ஜந்த் சிங் 10-வது நிமிடத்திலும், 20-வது நிமிடத்தில் தென்கொரியா அணி வீரர் லீ சென்ஜில்லும் கோல் போட்டனர்.

முதல் கோலை அடித்த ஹர்மன்பிரீத் சிங் 47-வது மற்றும் 59-வது நிமிடங்களில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி ஏற்கனவே ஓமன், பாகிஸ்தான், ஜப்பான் அணிகளை தோற்கடித்து இருந்தது. நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியா-ஜப்பான், பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.

Next Story