இறுதிப்போட்டியில் ஆட இந்திய அணி மறுத்ததா? - சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் ஹாக்கி பயிற்சியாளர்


இறுதிப்போட்டியில் ஆட இந்திய அணி மறுத்ததா? - சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் ஹாக்கி பயிற்சியாளர்
x
தினத்தந்தி 31 Oct 2018 10:00 PM GMT (Updated: 31 Oct 2018 7:11 PM GMT)

இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆட மறுத்ததாக, பாகிஸ்தான் ஆக்கி பயிற்சியாளர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

கராச்சி,

சமீபத்தில் ஓமனில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோத இருந்தன. போட்டி தொடங்குவதற்கு முன்பே பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பெற்றுக் கொண்டன. இந்த நிலையில் சர்ச்சையை கிளப்பியுள்ள பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹசன் சர்தார், ‘இறுதிப்போட்டியில் ஆடுவதற்கு எங்களது வீரர்கள் முழு உத்வேகத்துடன் இருந்தனர். மழை பெய்த பிறகு கூட, இந்திய அணியினர் விரும்பினால் களம் இறங்க தயாராக இருக்கிறோம் என்று எங்களது வீரர்கள் போட்டி அமைப்பாளர்களிடம் கூறினர். ஆனால் ஆடுகளத்தை சுட்டிகாட்டி இந்திய வீரர்கள் பின்வாங்கி விட்டனர்’ என்றார்.

இதற்கு ஆக்கி இந்தியா அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. இதன் நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘பாகிஸ்தான் சொல்வது வடிக்கட்டிய பொய். மழையால் தாமதம் ஆன பிறகு அவர்கள் (பாகிஸ்தான்) விளையாட விரும்பவில்லை. ஏனெனில் விமானம் மூலம் தாயகம் திரும்புவதற்கு அதிகாலை 3 மணிக்கு அவர்கள் கிளம்ப வேண்டி இருந்தது. நாங்கள் மறுநாள் தான் புறப்பட வேண்டி இருந்தது. அதனால் காத்திருப்பதில் எங்களுக்கு பிரச்சினை இருக்கவில்லை. மழை நின்ற போது, உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணி. அதன் பிறகு வெள்ளக்காடாக இருந்த ஆடுகளத்தை உலர வைக்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும். ஒளிபரப்பு தாரர்கள், வர்ணனையாளர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்களின் அறைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது’ என்றார்.

Next Story