‘இந்தியாவால் உலக கோப்பையை வெல்ல முடியும்!' -ஆஸ்திரேலிய நிபுணர்


‘இந்தியாவால் உலக கோப்பையை வெல்ல முடியும்! -ஆஸ்திரேலிய நிபுணர்
x
தினத்தந்தி 3 Nov 2018 9:53 AM GMT (Updated: 3 Nov 2018 9:53 AM GMT)

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் தொழில்நுட்ப ஆலோசகரான ரிக் சார்ல்ஸ்வொர்த்தை பன்முகத் திறமை வாய்ந்தவர் என்று தாராளமாகக் கூறிவிடலாம்.

இளங்கலைப் பட்டம் பெற்ற ரிக் சார்ல்ஸ்வொர்த், பின்னர் ஒரு மருத்துவராகத் தகுதி பெற்றார், மேற்கு ஆஸ்திரேலிய அணி சார்பில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார், பத்தாண்டு காலம் ஆஸ்திரேலிய எம்.பி.யாக இருந்திருக்கிறார், ஆஸ்திரேலிய ஆக்கி அணியில் ஆடியிருக்கிறார், தனது பயிற்சியில் ஆஸ்திரேலியா ஒலிம்பிக்கில் வெல்ல உதவியிருக்கிறார், பல நாட்டு ஆக்கி அணிகளுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.

இப்படி தான் தொட்டது எல்லாம் துலங்க வேண்டும் என்று விரும்பிய சார்ல்ஸ்வொர்த்தின் மிகப் பெரிய பிரியம், இந்திய ஆக்கி அணி மீது.

ஆக்கி நிபுணரான ரிக் சார்ல்ஸ்வொர்த் இன்றைய இந்திய அணி குறித்து என்ன கூறுகிறார்?

இதோ, அவரது பேட்டி...

2008-ம் ஆண்டில் இந்திய ஆக்கியுடன் நீங்கள் தொடர்புபட்டிருந்தீர்கள். இந்திய ஆக்கி குறித்து என்ன கூறுகிறீர்கள்?

இந்திய ஆக்கி அணியின் கதை சுவாரசியமானது. ஒரு காலத்தில் உலகில் சிறந்த ஆக்கியை விளையாடிய முன்னோடிகள் அவர்கள். 1970-ல் ஆஸ்திரேலியா ஆக்கி விளையாடத் தொடங்கியபோது, எங்களால் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து ஆக்கியில் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான நிலையில், உங்களால் முன்னேற முடியாது. தற்போது இந்திய ஆண்கள், பெண்கள் இரு அணிகளுமே நன்றாக விளையாடி வருகின்றன. மீண்டும் ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. தவிர, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் இந்தியா மீண்டும் ஆக்கியில் உச்சத்துக்கு உயர வேண்டும் என்று நினைக்கிறது. அது இந்தியாவுக்கும், உலக ஆக்கிக்கும் நல்லது.

இந்திய அணியின் பயிற்சியாளராக ஹரேந்திரா சிங் சரியான தேர்வுதானா?

இந்திய ஆக்கி அணிக்கான பயிற்சித் திட்டத்தில் ஓர் இந்தியர் இருப்பது நல்லது. ஒரு வெளிநாட்டுப் பயிற்சியாளரால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது அவசியமும் இல்லை. ஹரேந்திரா திறமைசாலி. ஆனால் வெற்றி வருவது, மற்ற துணை ஊழியர்களையும் பொருத்தது. அவருக்குச் சரியான ஆட்கள் கிட்ட வேண்டும்.

உடல்திறன்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் தற்போது இந்திய ஆக்கி எந்த இடத்தில் நிற்கிறது?

தற்போது உலகின் சிறந்த 5 அணிகளில் ஒன்று இந்தியா. சாம்பியன்ஸ் டிராபியில் கடந்த இரு முறைகளில் அவர்கள் இறுதிப்போட்டியை எட்டியிருக்கிறார்கள். அதிலும் கடந்த முறை நெதர்லாந்தில் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றபோதும், ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் கொடுத்தனர். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒரு எதிர் பாராத பின்னடைவு. நீங்கள் அதீத நம்பிக்கையில் இருக்கும்போது இதுபோல நடக்கும்தான். ஆனால், இந்தியாவால் பழைய பொற்காலத்துக்குத் திரும்ப முடியும். புவனேஸ்வரில் இம்மாதம் நடக்கும் உலகக் கோப்பையை அவர்களால் வெல்ல முடியும்.

ஷேன் வார்னேயின் சுயசரிதை குறித்து உங்கள் கருத்து? அதில் அவர், ஸ்டீவ் வாகை ஒரு சுயநலவாதி என்று கூறியிருக்கிறாரே?

ஷேன் வார்னே ஒரு சர்ச்சையான நபர் (சிரிக்கிறார்). அவர், பயிற்சியாளர் ஜான் புக்கானனுக்கு பிடித்த வீரராக இருந்ததில்லை. அப்போது அவருடன் விளையாடிய ஸ்டீவ் வாக், மேத்யூ ஹைடன், கிளென் மெக்ராத் போன்றோர் நிதானம் தவறாதவர்கள். வார்னே கூறியதன் உள்விவகாரம் எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்டீவ் வாக் ஓர் அருமையான கேப்டன், வெற்றிகரமான வீரர். அவர் மீதான எனது மதிப்பை வார்னேயின் புத்தகம் மாற்றவில்லை.

Next Story