உலக கோப்பை ஆக்கியில் கால்இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி கனடாவுடன் இன்று மோதல்


உலக கோப்பை ஆக்கியில் கால்இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி கனடாவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 8:44 PM GMT)

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை சந்திக்கிறது.

புவனேஸ்வரம்,

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை சந்திக்கிறது.

இந்தியா–கனடா மோதல்

16 அணிகள் பங்கேற்றுள்ள 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5–வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11–வது இடத்தில் இருக்கும் கனடாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 5–0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வென்றது. 2–வது ஆட்டத்தில் 2–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்துடன் டிரா கண்டது. 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி கோல் வித்தியாசத்தில் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா அணி 1–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 1–1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. ஒரு புள்ளி மட்டும் பெற்றுள்ள அந்த அணி 3–வது இடத்தில் இருக்கிறது.

தற்காப்பு ஆட்டத்தில்...

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் நமது அணியின் தற்காப்பு ஆட்டத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். கடைசி கட்ட நெருக்கடியில் தற்காப்பு ஆட்டத்தில் கோட்டை விடுவது நமது அணியின் வாடிக்கையாக இருக்கிறது. பெல்ஜியத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 56–வது நிமிடத்தில் இந்திய அணி கோல் வாங்கியதால் தான் ஆட்டம் டிரா ஆனது. அந்த கோலை விடாமல் இருந்தால் நமது அணி வெற்றி பெற்று இருக்கும்.

கனடா அணியின் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக உள்ளது. இதுவரை அந்த அணி 3 கோல்கள் மட்டுமே வாங்கி இருக்கிறது. கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வலுவான பெல்ஜியம் அணி சிரமப்பட்டு தான் 2 கோல்கள் அடிக்க முடிந்தது. அந்த அளவுக்கு கனடா அணியின் தடுப்பு அரண் கச்சிதமாக உள்ளது.

கால்இறுதிக்கு முன்னேறுமா?

2013–ம் ஆண்டு முதல் இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 ஆட்டத்தில் வெற்றியும், ஒரு தோல்வியும் கண்டது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. 2016–ம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுடன் 2–2 என்ற கோல் கணக்கில் டிரா கண்ட கனடா அணி, கடந்த ஆண்டு (2017) லண்டனில் நடந்த உலக லீக் அரைஇறுதி சுற்று ஆட்டத்தில் 3–2 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

கோல் வித்தியாசத்தில் (+5) இந்திய அணி முன்னிலை வகிப்பதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேற முடியும். அதேநேரத்தில் கனடா அணி தோல்வி கண்டால் கால்இறுதி வாய்ப்பை இழக்க நேரிடலாம். இதனால் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் முழு பலத்துடன் மல்லுக்கட்டுவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். இந்திய அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து வெற்றியை தன்வசப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

பயிற்சியாளர் கருத்து

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த கால தோல்விகள் எல்லாம் அனுபவமாகும். தற்போது அந்த அனுபவங்களை பயன்படுத்தி கொள்ள முயற்சிப்போம். கனடாவுக்கு எதிரான லீக் ஆட்டம் நமது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறுவதை நிர்ணயம் செய்யக்கூடியதாகும். உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று மற்றும் ஒலிம்பிக் போட்டியில் நடந்தது என்ன? என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. நமது பலமான தாக்குதல் ஆட்டத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடாது. எதிரணியினர் நமக்கு இடம் கொடுக்காத வகையில் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்துவார்கள். அதிகம் காத்து இருந்து வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் தாக்குதல் தொடுக்க திட்டமிடுவார்கள். ஆனால் நாம் நம்முடைய பலத்துக்கு உகந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். நமது பாரம்பரிய தாக்குதல் ஆட்டத்தை தொடுக்க வேண்டும். அதில் சிறிய மாற்றம் செய்தாலும், மனநிலையை மாற்றக்கூடாது’ என்றார்.

பெல்ஜியம்–தென்ஆப்பிரிக்கா

முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பெல்ஜியம் அணி, தரவரிசையில் 15–வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. பெல்ஜியம் அணி ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று ‘சி’ பிரிவில் 2–வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்க அணி ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.


Next Story