ஹாக்கி

மாற்றம் பெறப் போகும் ஆக்கி களம் + "||" + Going to change the hockey Field

மாற்றம் பெறப் போகும் ஆக்கி களம்

மாற்றம் பெறப் போகும் ஆக்கி களம்
தற்போது ஆக்கி போட்டிகள் பெரும்பாலும் செயற்கைத்தளத்தில் விளையாடப்படுகின்றன. சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் புதிய முடிவின்படி, இந்தத் தளம் மாற்றம் காணப் போகிறது.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் 46-வது கூட்டத்தில், 2024-ல் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி முதல், புதிய செயற்கைத் தளத்தில் ஆக்கி ஆடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய ஆக்கி தளத்தின் சிறப்பு, அதற்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது என்பதுதான். தற்போதைய ஆக்கி தளத்தில், பந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த நிறைய தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

‘‘ஆக்கி களத்தில் அதிக தண்ணீரைப் பீய்ச்சும் நிலை இனியும் தொடராது. தற்போதைய நிலையில், நிறைய தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக, உலகெங்கும் உள்ள செயற்கை ஆக்கி தள அமைப்பாளர்களுடன் நாங்கள் பேசி யிருக்கிறோம். தண்ணீர் தேவைப்படும் தற்போதைய தளம் போன்ற தரமான, அதேநேரம் தண்ணீர் தேவையில்லாத ஓர் அமைப்பை அவர்கள் உருவாக்க வேண்டும்’’ என்கிறார், சர்வதேச ஆக்கி சம்மேளன தலைமை செயல் அலுவலர் தியரி வீல்.

அவரே தொடர்ந்து, ‘‘புதிய செயற்கைத் தளம், காலணி, பந்து இவை மூன்றும் இணைந்து, தற்போதைய நிலையைத் தரலாம். எப்படியோ, உச்சநிலை போட்டிகளுக்கு, இன்றைக்கு உள்ளது போன்ற தரமான சூழலை மாற்றுவழியில் உருவாக்க வேண்டியது நமது கடமை. காரணம், ஒரு புறம் மக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போதும் மறுபுறம் நாம் ஆக்கி களத்தில் தாராளமாகத் தண்ணீரை வீணடித்துக்கொண்டிருக்க முடியாது’’ என்கிறார் அவர்.

செயற்கைத் தளம் அல்லாமல், பசும்புல் தரையில் ஆக்கி விளையாடுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.

சர்வதேச ஆக்கி போட்டிகள் புல் தரையில் இருந்து செயற்கைத் தளத்துக்கு மாற்றம் பெற்று நாற்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டன. முக்கியமான போட்டிகள் சிலவற்றை புல்தரைக் களத்தில் விளையாடலாமா என்பது குறித்தும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் அலசி வருகிறது.

‘‘செயற்கைத் தளத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விளையாடுவதால் இது பணக்கார விளையாட்டு என்கிற மாதிரியான தோற்றம் ஏற்படுகிறது. ஆக்கியை எந்தத் தளத்திலும் விளையாட முடியும். இப்போதைக்கு, சர்வதேசப் போட்டிகளை தண்ணீர் பீய்ச்சிய செயற்கைத் தளத்தில் நடத்தினாலும், இரண்டாம் நிலை போட்டிகளுக்கு நாம் மற்ற வகை களங்கள் குறித்து யோசிக்கலாம்’’ என்கிறார், வீல்.

இன்றும் நம் உள்ளூர் போட்டிகள் மண் களத்தில் விளையாடப்படுவது சாதாரணம். சர்வதேச ஆக்கியில் இந்தியாவின் சரிவுக்கு, இவ்விளையாட்டு செயற்கைத்தளத்துக்கு மாறியது ஒரு காரணமாகக் கூறப்படுவது உண்டு.

இதற்கிடையில், அணிக்கு ஐவர் மட்டும் அடங்கிய ‘ஆக்கி5’ குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் முடிந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இம்முறையில்தான் ஆக்கி ஆட்டங்கள் நடந்தன.

இந்த ஐவர் அணி முறையில் செலவுகள் குறையும் என்பதால், ஆக்கி விளையாட்டின் வளர்ச்சிக்கு இது உதவும் எனக் கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிற்பகுதியில், ஆக்கி விளையாட்டு பிரபலமாக இல்லாத நாடுகளில் இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்தும் முயற்சியாக ஐவர் அணி கண்காட்சிப் போட்டித் தொடர்களை நடத்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் திட்டமிட்டிருக்கிறது.

ஆனால், வழக்கமான, அணிக்கு 11 பேர் அடங்கிய ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அந்த அமைப்பு தெளிவு படுத்தியிருக்கிறது.

‘‘ஐவர் அணி ஆக்கி மூலம், இந்த விளையாட்டை மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அதன் மூலம் அவர்கள் ஆக்கியை விளையாடத் தொடங்குவார்கள். அதற்காக, வழக்கமான வடிவம் ஒதுக்கப்படாது. ஐவர் அணி ஆக்கி ஆட்டத்துக்கு இளையோர் ஒலிம்பிக்கில் நல்ல வரவேற்புக் கிட்டியது. ஆக, பாரம்பரிய வடிவமும், புதிய வடிவமும் ஒன்றாகத் தொடரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஐவர் அணி போட்டிகளை நடத்துவது சிறு நாடு களுக்கு வசதியாக இருக்கும்’’ என்று வீல் விளக்குகிறார்.

காலத்துக்கு ஏற்ப எல்லா விளையாட்டுகளும் மாற்றம் பெற்று வருகின்றன. ஆக்கியும் அப்படியே.