ஹாக்கி

உலக கோப்பை ஆக்கி: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு தகுதி + "||" + World Cup Hockey: England and France qualify for quarter-finals

உலக கோப்பை ஆக்கி: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு தகுதி

உலக கோப்பை ஆக்கி: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு தகுதி
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.
புவனேஸ்வரம்,

16 அணிகள் இடையிலான 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறின. அடுத்து 2 மற்றும் 3-வது இடங்களை பெற்ற அணிகள் ‘கிராஸ்ஓவர்’ அடிப்படையில் 2-வது சுற்றில் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும்.


இதன்படி 2-வது சுற்றில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணி, ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பெற்ற நியூசிலாந்துடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியில் 25-வது நிமிடத்தில் வில் கால்னனும், 44-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி லூகா டெய்லரும் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. தோல்வி கண்ட நியூசிலாந்து அணி கால்இறுதி வாய்ப்பை இழந்தது.

நாளை (புதன்கிழமை) நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 2-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்த பிரான்ஸ் அணி, ‘பி’ பிரிவில் 3-வது இடம் பெற்ற சீனாவை சந்தித்தது. இதில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. பிரான்ஸ் அணியில் டிமோத்தி கிளமென்ட் 36-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். தோல்வி அடைந்த சீனா அணி கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம்-பாகிஸ்தான் (மாலை 4.45 மணி), நெதர்லாந்து-கனடா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.