ஹாக்கி

உலக கோப்பை ஆக்கியில் பாகிஸ்தான் அணி வெளியேற்றம் - பெல்ஜியத்திடம் வீழ்ந்தது + "||" + Pakistan Team exit in the Hockey World Cup - fell to Belgium

உலக கோப்பை ஆக்கியில் பாகிஸ்தான் அணி வெளியேற்றம் - பெல்ஜியத்திடம் வீழ்ந்தது

உலக கோப்பை ஆக்கியில் பாகிஸ்தான் அணி வெளியேற்றம் - பெல்ஜியத்திடம் வீழ்ந்தது
உலக கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி 0-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது.
புவனேஸ்வரம்,

16 அணிகள் இடையிலான 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4 முறை உலக சாம்பியனும், உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் அணியுமான பாகிஸ்தான், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பெல்ஜியத்தை எதிர்கொண்டது.


உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பெல்ஜியம் அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பாகிஸ்தான் அணியின் தடுப்பு அரண் தாக்குப்பிடித்தது. 10-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு அந்த அணியின் தோம்சா பிரில்ஸ் (13-வது நிமிடம்), செட்ரிக் சார்லியர் (27-வது நிமிடம்), செபாஸ்டியன் டோகிர் (35-வது நிமிடம்), டாம் பூன் (53-வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்கள்.

பாகிஸ்தான் அணியால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் பெல்ஜியம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை விரட்டியடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. தோல்வி கண்ட பாகிஸ்தான் அணி நடையை கட்டியது.

மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் கனடாவை ஊதித் தள்ளி கால்இறுதியை எட்டியது.

இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா-இங்கிலாந்து (மாலை 4.45 மணி), ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் இந்தியா-நெதர்லாந்து (மாலை 4.45 மணி), ஜெர்மனி-பெல்ஜியம் (இரவு 7 மணி) அணிகள் சந்திக்கின்றன.