உலக கோப்பை ஆக்கி அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் மோதல்


உலக கோப்பை ஆக்கி அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் மோதல்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:15 PM GMT (Updated: 14 Dec 2018 7:46 PM GMT)

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து, இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

புவனேஸ்வரம்,

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, இங்கிலாந்து, சீனா ஆகிய அணிகளையும், கால்இறுதியில் பிரான்சையும் தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணி லீக் ஆட்டங்களில் மலேசியா, பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்தது. ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 2-வது சுற்றில் கனடாவையும், கால்இறுதியில் இந்தியாவையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

1986, 2010, 2014-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி தாக்குதல் ஆட்டத்தை முக்கிய அஸ்திரமாக கொண்டு செயல்படும். 3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், திடீரென எதிர் தாக்குதல் தொடுத்து அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும்.

ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய முழு வேகம் காட்டும். அதேநேரத்தில் கடந்த முறை (2014) இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க நெதர்லாந்து அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

2013-ம் ஆண்டு முதல் இரு அணிகளும் 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலிய அணி 5 முறையும், நெதர்லாந்து அணி 4 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

முன்னதாக மாலை 4 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை சந்திக்கிறது.



Next Story