உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்


உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:15 PM GMT (Updated: 15 Dec 2018 8:15 PM GMT)

உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதியில் நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.

புவனேஸ்வரம்,

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான பெல்ஜியம், இங்கிலாந்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே வலுவாக ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் அணி 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை பந்தாடி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

பெல்ஜியம் அணியில் டாம் பூன் (8-வது நிமிடம்), சிமோன் கோக்னர்ட் (19-வது நிமிடம்), செட்ரிக் சார்லியன் (42-வது நிமிடம்), அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் (45 மற்றும் 50-வது நிமிடம்), செபாஸ்டியன் டாக்கியர் (53-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். ஒரு கோல் கூட திரும்ப முடியாமல் தவித்த இங்கிலாந்து அணி தங்களுக்கு கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் வீணடித்தது.

47 ஆண்டு கால உலக கோப்பை ஆக்கி வரலாற்றில் பெல்ஜியம் அணி இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். 2014-ம் ஆண்டு 5-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் முந்தைய சிறந்த செயல்பாடாக இருந்தது.

இரவில் நடந்த மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் நெதர்லாந்துடன் கோதாவில் குதித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 9-வது நிமிடத்தில் கிளென் ஸ்சுர்மானும், 20-வது நிமிடத்தில் சீவ் வான் ஆசும் கோல் அடித்து நெதர்லாந்துக்கு 2-0 என்ற கணக்கில் முன்னிலை ஏற்படுத்தி தந்தனர். மனம் தளராத ஆஸ்திரேலிய அணியினர் சரிவில் இருந்து எழுச்சி பெற போராடினர். 45-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிம் ஹோவர்ட் கோல் அடித்தார். இதன் பிறகு கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் எட்டி ஒக்கென்டன் (60-வது நிமிடம்) பந்தை வலைக்குள் செலுத்தி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். வழக்கமான நேர முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.

இதையடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் முதல் 5 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 3-ஐ மட்டும் கோலாக்கின. இதனால் ஆட்டம் ‘சடன் டெத்’ முறைக்கு சென்றது. இதில் முதல் வாய்ப்பை நெதர்லாந்தின் ஜெரோன் ஹெட்ஸ்பெர்ஜர் கோலாக மாற்றினார். பின்னர் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் பியலே தங்களுக்குரிய வாய்ப்பை கோலாக்க முயன்ற போது, நெதர்லாந்து கோல் கீப்பர் பிர்மின் பிளாக் அருமையாக முறியடித்து வெற்றியை உறுதி செய்தார்.

திரிலிங்கான இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் நெதர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ‘ஹாட்ரிக்’ கனவை தகர்த்து 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அத்துடன் கடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்திக்கின்றன.

தந்தை இறந்த சோகத்திலும் ஆடிய பெல்ஜியம் வீரர்

பெல்ஜியம் முன்னணி வீரர் 27 வயதான சிமோன் கோக்னர்ட்டின் தந்தை நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். இந்த தகவல் நேற்று காலை கோக்னர்ட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் உணர்ச்சியையும், சோகத்தையும் தனக்குள் கட்டுப்படுத்திக்கொண்டு முக்கியமான அரைஇறுதியில் களம் இறங்கிய கோக்னர்ட் 19-வது நிமிடத்தில் கோல் அடித்து ரசிகர்களின் மனதை வென்றார். துக்கம் அனுசரிக்கும் வகையில் பெல்ஜியம் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்த வெற்றியை அவரது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக பெல்ஜியம் கேப்டன் தாமஸ் பிரையல்ஸ் அறிவித்தார்.




Next Story