ஆக்கி வீராங்கனை சவிதாவின் சவால்


ஆக்கி வீராங்கனை சவிதாவின் சவால்
x
தினத்தந்தி 6 April 2019 5:15 AM GMT (Updated: 6 April 2019 5:15 AM GMT)

இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியா...

மலேசியா சென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணி அஸ்லான் ஷா கோப்பை தொடரில் இரண்டாமிடத்துடன் திரும்பியிருக்கிற நிலையில், இந்திய ஆக்கி பெண்கள் அங்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

மலேசியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர், இந்திய பெண்கள் ஆக்கி அணி வருகிற 2020 ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்குத் தயாராக உதவும் என நம்பப்படுகிறது.

அதே நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறார், இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியா...

‘‘இந்த ஆண்டு தொடக்கத்தில் நாங்கள் ஸ்பெயினில் விளையாடினோம். அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராகவும், அயர்லாந்து அணிக்கு எதிராகவும் நாங்கள் நன்றாகவே ஆடினோம். அதே தன்னம்பிக்கையுடன் நாங்கள் தற்போது மலேசியா வந்திருக்கிறோம். ஸ்பெயினில் நாங்கள் விளையாடிய ஆட்டங்களை அலசியபிறகு, எந்தெந்தப் பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அறிந்திருக்கிறோம்.’’

இந்திய அணியின் கோல் கீப்பரான சவிதா, வழக்கமான கேப்டன் ராணி ராம்பாலுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிற நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். தடுப்பு வீராங்கனை தீப் கிரேஸ் எக்கா, துணை கேப்டன்.

அணியின் தற்போதைய நோக்கம் குறித்து தெளிவாக இருக்கிறார் சவிதா.

‘‘இப்போது நாங்கள் மேற்கொள்வது எல்லாம், இந்த ஆண்டில் நடைபெறப் போகும் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்கான தயாரிப்புகளில் ஒரு பகுதிதான். நாங்கள் ஓர் அணியாகவும், தனித்தனி வீராங்கனைகளாகவும் முன்னேற்றம் காண விரும்புகிறோம்’’ என்று விளக்குகிறார், அவர்.

‘‘எதிரணி வீராங்கனைக்கு எதிரான தனிநபர் தற்காப்பிலும், எதிரணியின் பந்தைத் தடுத்து நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தபின் கோலுக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது பற்றியுமே நாங்கள் தற்போது அதிகம் திட்டமிடுகிறோம். ஒவ்வொரு வீராங்கனையும் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது’’ என சவிதா சொல்கிறார்.

இந்திய பெண்கள் அணி சில முக்கிய வீராங்கனைகள் இல்லாமலே இந்த மலேசியத் தொடரில் ஆடுகிறது. அவர்களில், ‘ஸ்டிரைக்கர்’ ராணி தவிர, நடுக்கள வீராங்கனை நமீதா தோப்போ, ‘டிராக்பிளிக்கர்’ குர்ஜித் கவுர் ஆகியோர் முக்கியமானவர்கள். அனுபவம் வாய்ந்த அவர்கள், காயம் காரணமாகவே ஒதுங்கியிருக்க வேண்டியதாகிவிட்டது.

இந்நிலையில், இளம் வீராங்கனைகள் பலருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இதை அவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் சவிதா.

இப்போது இந்தியாவின் தற்காப்பு அணியில் இளம் வீராங்கனை சலீமா டேட்டே, ரீனா கோக்கர், எக்கா, ராஷ்மிதா மின்ஸ், சுசீலா சானு, புக்ராம்பம், சுனிதா லக்ரா ஆகியோர் உள்ளனர். இவர்களில் சுனிதா, ஸ்பெயின் தொடரில் இடம்பெறாமல் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார்.

காயத்தில் இருந்து மீண்ட அனுபவ நடுக்கள வீராங்கனை மோனிகாவின் வருகை அணிக்குப் பலம் எனக் கருதப்படுகிறது. அவருடன், கரிஷ்மா யாதவ், நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ் ஆகியோரும் நடுக்களத்துக்கு வலுச் சேர்க்கின்றனர்.

முன்களத்தில், ஜோதி, வந்தனா கட்டாரியா, லால்ரெம் சியாமி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர் ஆகியோர் தாக்குதல் தொடுப்பார்கள்.

‘‘தற்போது சில திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளுடன், அணியின் பலம் ஓரளவு நன்றாகவே உள்ளது. அவர்களில் சிலர் நல்ல சர்வதேச அனுபவம் கொண்டவர்களும் கூட. சர்வதேச நிலையில் ஆடும்போது என்ன தேவை, தனிநபர்களாக தங்கள் பொறுப்பு என்ன என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இளம் வீராங்கனைகள் தங்கள் திறன்களை வெளிக்காட்ட இது ஓர் அருமையான சந்தர்ப்பம். இதில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, ஒலிம்பிக் போட்டி தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணிக்குத் தேர்வாகிறார்களா எனப் பார்ப்போம்’’ என்று சவால் போலச் சொல்கிறார் சவிதா.

சவிதாவின் சவால், இளம் வீராங்கனைகளின் காதில் விழுகிறதா?


Next Story