ஆக்கி தொடர்: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா


ஆக்கி தொடர்: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 10 May 2019 10:00 PM GMT (Updated: 10 May 2019 8:18 PM GMT)

ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெர்த், 

ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய தொடர்

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது.

வலுவான முன்னிலை

6–வது நிமிடத்தில் இந்திய அணிக்கு முதலாவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி ரூபிந்தர் பால்சிங் அபாரமாக கோல் அடித்தார். காயம் காரணமாக 8 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர் முதல் கோலை அடித்து அசத்தினார்.

12–வது நிமிடத்தில் இந்திய அணி தனது 2–வது கோலை அடித்தது. ஹர்மன்பிரீத் சிங் கடத்தி கொடுத்த பந்தை சுமித் குமார் ஜூனியர் கோலாக்கினார். அடுத்த நிமிடத்தில் இந்திய அணி 3–வது கோலை போட்டது. ஆகாஷ்தீப் சிங் கடத்தி கொடுத்த பந்தை சுமித் குமார் ஜூனியர் கோலுக்குள் திணித்தார். இதனால் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

இந்திய அணி வெற்றி

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தியது. புதிய பயிற்சியாளர் கிரகாம் ரீட் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 2–வது வெற்றியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் தேசிய அணிக்காக விளையாடும் 7 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அடுத்து இந்திய அணி நாளை மறுநாள் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடன் மீண்டும் மோதுகிறது.

வெற்றிக்கு பிறகு இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் கிரகாம் ரீட் அளித்த பேட்டியில், ‘முதலாவது கால் பகுதி ஆட்டத்தில் நமது அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். 2–வது மற்றும் 3–வது கால் பகுதி ஆட்டம் நெருக்கமாக இருந்தது. அணியினரின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய ஏற்படுத்தினோம். வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story