அகில இந்திய ஆக்கி போட்டி: செகந்திராபாத்-சென்னை அணிகள் வெற்றி


அகில இந்திய ஆக்கி போட்டி: செகந்திராபாத்-சென்னை அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 18 May 2019 9:30 PM GMT (Updated: 18 May 2019 7:55 PM GMT)

கோவில்பட்டியில் நேற்று நடந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் செகந்திராபாத், சென்னை அணிகள் வெற்றி பெற்றது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 11-வது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது.

போட்டியின் 3-வது நாளான நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும், சென்னை ஐ.சி.எப். அணியும் மோதின.

இதில் 3-2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது. 20-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் ஷிஷி கவுடா பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 28-வது நிமிடத்தில் அதே அணி வீரர் சந்தீப்குமார்சிங் ஒரு பீல்டு கோல் போட்டார். 31-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் சஞ்சய் ஷால்ஷோ பீல்டு கோல் போட்டார். 51-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் ஷிஷி கவுடா பீல்டு கோல் போட்டார். 60-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஷியாம்குமார் பீல்டு கோல் போட்டார்.

மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதியது. இதில் 6-0 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரெயில்வே அணி வெற்றி பெற்றது.

இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் மும்பை ஆல் இந்தியா கஸ்டம் மற்றும் ஜி.எஸ்.டி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதியது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புவனேஷ்வர் ஈஸ்ட் கோஸ்ட் ரெயில்வே அணியும், சண்டிகர் சி.ஐ.எஸ்.எப் அணியும் மோதுகின்றன.

6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு ஆக்கி அசோசியேஷன் அணியும், மும்பை ஆல் இந்தியா கஸ்டம் மற்றும் ஜி.எஸ்.டி அணியும் மோதுகின்றன.

Next Story