ஹாக்கி

மாநில ஆக்கி போட்டி; திருச்சி அணி சாம்பியன் + "||" + State Match hocky Trichy Team Champion

மாநில ஆக்கி போட்டி; திருச்சி அணி சாம்பியன்

மாநில ஆக்கி போட்டி; திருச்சி அணி சாம்பியன்
வாடிப்பட்டி அருகே நடந்த மாநில அளவிலான ஆக்கி போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் டாபே டிராக்டர் தயாரிப்பு தொழிற்சாலை சார்பில் 4-ம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் பாண்டியராஜபுரம் பள்ளி அணி, வாடிப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் உள்ள விளையாட்டு விடுதி அணிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.


நாக்அவுட் முறையில் நடந்த இப்போட்டியில் அரைஇறுதி போட்டிக்கு திருச்சி, நெல்லை, மதுரை, அரியலூர் ஆகிய விளையாட்டு விடுதி அணிகள் தகுதி பெற்றன.

இந்தநிலையில் நேற்று நடந்த அரைஇறுதி போட்டியில் திருச்சி, நெல்லை அணிகள் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதி அணி, நெல்லை விளையாட்டு விடுதி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

முதலிடம் பிடித்த திருச்சி அணிக்கு டாபே சுழற்கோப்பையுடன் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நெல்லை விளையாட்டு விடுதி அணிக்கு ரூ.7,500 பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக நடந்த பரிசுளிப்பு விழாவிற்கு டாபே முதுநிலை துணைத்தலைவர் சாரங்கராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் முன்னிலை வகித்தார். பாண்டியராஜபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் வரவேற்றார். இதில் டாபே முதுநிலை துணைத்தலைவர் சீனிவாசன், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பஞ்சவர்ணம், நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். விழாவில் டாபே துணை பொது மேலாளர்கள் நடராஜன், திருவேங்கடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், எவர்கிரேட் ஆக்கி கிளப் தலைவர் ராமானுஜம், சர்வதேச தடகள வீரர் சந்துரு, சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.