ஹாக்கி

சர்வதேச ஆக்கி:இந்திய அணிகள் ‘சாம்பியன்’ + "||" + International Hockey: Indian teams 'champion'

சர்வதேச ஆக்கி:இந்திய அணிகள் ‘சாம்பியன்’

சர்வதேச ஆக்கி:இந்திய அணிகள் ‘சாம்பியன்’
ஜப்பானில் நடந்த சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.
டோக்கியோ, 

ஜப்பானில் நடந்த சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.

இந்திய அணி ‘சாம்பியன்’

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் சர்வதேச ஆக்கி போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை பந்தாடி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

அத்துடன் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் (1-2) கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. இந்திய அணியின் தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 7-வது நிமிடத்திலும், சாம்ஷெர்சிங் 18-வது நிமிடத்திலும், நீலகண்ட ஷர்மா 22-வது நிமிடத்திலும், குர்சாகிப்ஜித் சிங் 26-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 27-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

பெண்கள் அணியும் அசத்தல்

பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 14-வது இடத்தில் இருக்கும் ஜப்பானை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. இதன் பலனாக இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் 11-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே ஜப்பான் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீராங்கனை மினாமி ஷிமிஜூ இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

பிற்பாதியில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. 33-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்தை ஜப்பான் அணியின் கோல் கீப்பர் மெகுமி தடுத்தார். அவர் தடுத்து திரும்பிய பந்தை இந்திய இளம் முன்கள வீராங்கனை லால்ரெம்சியாமி அதிரடியாக செயல்பட்டு கோலுக்குள் திணித்தார்.

கடைசி கட்டத்தில் ஜப்பான் அணிக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணியின் கோல் கீப்பர் சவிதா அருமையாக செயல்பட்டு எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.