அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி 2-வது வெற்றி


அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 3 Sep 2019 1:25 AM GMT (Updated: 3 Sep 2019 1:25 AM GMT)

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 93-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டத்தில் மோதி வருகின்றன.

5-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய விமானப்படை-இந்தியன் ஆயில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தின. 4-வது நிமிடத்தில் இந்திய விமானப்படை அணி வீரர் தமான்ஜித் சிங் முதல் கோல் அடித்தார். 11-வது நிமிடத்தில் இந்தியன் ஆயில் அணி வீரர் குர்ஜிந்தர் சிங் பதில் கோல் திருப்பினார். 20-வது நிமிடத்தில் விமானப்படை அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஹர்வந்த் சிங் இந்த கோலை அடித்தார். 26-வது நிமிடத்தில் இந்தியன் ஆயில் வீரர் அபான் யூசுப் கோல் அடித்தார். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

29-வது நிமிடத்தில் விமானப்படை அணி வீரர் மஜோர் சிங் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தியன் ஆயில் வீரர் அபான் யூசுப் 31-வது, 44-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். முடிவில் இந்தியன் ஆயில் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது.

மற்றொரு ஆட்டத்தில் மத்திய தலைமை செயலகம்-ரெயில்வே அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மத்திய தலைமை செயலகம் அணியில் கோவிந்த் சிங் ராவத் 30-வது, 44-வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். ஜெயேஷ் ஜாதவ் 47-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ரெயில்வே அணியில் ஷிஷி கவுடா ஹாட்ரிக் கோல்கள் திணித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு-பஞ்சாப் சிந்து வங்கி (மாலை 4.15 மணி), ராணுவம்-பஞ்சாப் நேஷனல் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story