ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி: அமெரிக்காவை பந்தாடியது இந்திய பெண்கள் அணி - ஆண்கள் பிரிவில் ரஷியாவை வென்றது இந்தியா


ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி: அமெரிக்காவை பந்தாடியது இந்திய பெண்கள் அணி - ஆண்கள் பிரிவில் ரஷியாவை வென்றது இந்தியா
x
தினத்தந்தி 2 Nov 2019 12:03 AM GMT (Updated: 2 Nov 2019 12:03 AM GMT)

ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி போட்டியில் புவனேசுவரத்தில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி, ரஷியாவை சாய்த்தது.

புவனேசுவரம்,

2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இதில் பெண்கள் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2013-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 8 ஆட்டத்தில் மோதி இருக்கும் அமெரிக்க அணி அதில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்ததால் (மேலும் ஒரு ஆட்டம் டிரா, ஒரு ஆட்டம் தோல்வி) இந்த போட்டியில் அந்த அணி கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக அமைந்தது. முதல் கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தாக்குதல் பாணியை கையாண்டாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 2-வது கால்பகுதியின் கடைசி கட்டத்தில் (28-வது நிமிடம்) இந்திய அணி முதல் கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனை லிலிமா மின்ஸ் இந்த கோலை அடித்து உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதையடுத்து முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

3-வது கால்பகுதியில் இந்திய அணியினர் இடைவிடாது அமெரிக்க அணியினருக்கு நெருக்கடி கொடுத்தனர். 40-வது நிமிடத்தில் ஷர்மிளா தேவியும், 42-வது நிமிடத்தில் குர்ஜித் கவுரும் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினர். கடைசி கால்பகுதியிலும் இந்திய வீராங்கனைகளின் வீறுநடை நீடித்தது.

46-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் கோல் எண்ணிக்கையை மேலும் உயர்த்தினார். தொடர்ந்து 51-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை கண்டது.

பதில் கோல் திருப்ப போராடிய அமெரிக்காவுக்கு 54-வது நிமிடத்தில் கிட்டிய ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பில் அந்த அணியின் எரின் மாட்சன் ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது.

புவனேசுவரத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதன் முடிவில் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ‘டிரா’ செய்தாலே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விடும். அல்லது மோசமான தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டும்.

இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆண்கள் பிரிவில் அரங்கேறிய தகுதி சுற்றில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 22-ம் நிலை அணியான ரஷியாவை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்திலும் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் களம் புகுந்த இந்தியாவின் ஆதிக்கமே ஓங்கியது. ஆனாலும் ரஷிய வீரர்களும் ஆச்சரியமூட்டும் வகையில் ஓரளவு ஈடுகொடுத்து ஆடினர்.



 

 5-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பை இந்தியாவின் ஹர்மன்பிரீத்சிங் எளிதில் கோலாக் கினார். 17-வது நிமிடத்தில் ரஷியாவின் ஆந்த்ரே குராவ் பீல்டு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு தாக்குதல் யுக்தியை தீவிரப்படுத்திய இந்திய வீரர்கள் மேலும் 3 கோல்களை திணித்தனர். 24 மற்றும் 53-வது நிமிடங்களில் மன்தீப்சிங்கும், 48-வது நிமிடத்தில் எஸ்.சுனிலும் கோல் அடித்தனர். ஆட்டம் முடியும் தருவாயில் (60-வது நிமிடம்) ரஷியாவின் மாட்கோவ்ஸ்கி பெனால்டி கார்னர் வாய்ப்பை லாவகமாக கோலாக்கினார்.

முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது. இதே இடத்தில் இன்று இரவு 8 மணிக்கு இவ்விரு அணிகளும் மறுபடியும் மல்லுகட்டுகின்றன. இதில் இந்திய அணி ‘டிரா’ செய்தாலே சிக்கலின்றி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்று விடலாம்.


Next Story