ஹாக்கி

ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி + "||" + Indian men and women qualify for Olympic hockey

ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
புவனேசுவரம்,

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.


இதில் பெண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த தகுதி சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது. இவ்விரு அணிகளும் நேற்று மீண்டும் சந்தித்தன. முதல் ஆட்டத்தை போன்றே இதிலும் இந்தியா சுலபமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த உள்ளூர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 


 இந்த ஆட்டத்தில் 5 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒலிம்பிக்கில் கால்பதிக்க முடியும் என்ற வெறியுடன் ஆடிய அமெரிக்க வீராங்கனைகள் தொடக்கம் முதலே இந்திய கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்தனர். அதற்கு பலனும் கிடைத்தது. அமெரிக்க வீராங்கனைகள் அமந்தா மகடன் 5-வது நிமிடத்திலும், கேப்டன் கேத்லீன் ஷர்கே 14-வது நிமிடத்திலும், அலிசா பார்கெர் 20-வது நிமிடத்திலும், அமந்தா மகடன் மீண்டும் 28-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டனர்.

முதல் பாதி ஆட்டத்திற்குள் 4 கோல் வாங்கியதால் இந்திய வீராங்கனைகள் திகைத்து போனார்கள். இதே முன்னிலை நீடித்தால் ‘ஷூட்- அவுட்’ முறையில் தான் ஒலிம்பிக் வாய்ப்பு முடிவாகும் என்ற சூழல் காணப்பட்டதால் இந்திய வீராங்கனைகள் மிகுந்த நெருக்கடிக்கும், பதற்றத்துக்கும் ஆளாகினர். சில ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். இந்த பரபரப்பான நிலையில் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் (48-வது நிமிடம்) அடித்து நிம்மதி பெருமூச்சு விட வைத்தார்.

இறுதிகட்டத்தில் இந்திய அணியினர் தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மேற்கொண்டு கோல் எதுவும் வாங்காமல் பார்த்துக் கொண்டனர்.

முடிவில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் இரு ஆட்டங்களின் முடிவையும் கணக்கிட்டு கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி (6-5) அமெரிக்காவை வீழ்த்தி ஒலிம்பிக் அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது. 36 ஆண்டுகளுக்கு பிறகு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற இந்திய பெண்கள் அணி, மறுபடியும் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.

இந்திய ஆண்கள் அணி அமர்க்களம்

ஆண்கள் பிரிவில், தகுதி சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது. இவ்விரு அணிகளும் நேற்றிரவு மறுபடியும் இதே மைதானத்தில் கோதாவில் குதித்தன.

ஆட்டம் தொடங்கிய 25-வது வினாடியிலேயே ரஷிய வீரர் அலெக்சி சோபோலெவ்ஸ்கி கோல் போட்டு அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய வீரர்கள் அலைஅலையாக முற்றுகையிட்டு கோல்மழை பொழிந்து ரஷியாவை நிலைகுலைய வைத்தனர். முதல் நிமிடம் மட்டுமே ரஷியாவுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். அதன் பிறகு ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. லலித் உபத்யாய் (17-வது நிமிடம்), ஆகாஷ் தீப்சிங் (23, 29-வது நிமிடம்), நீலகண்ட ஷர்மா (47-வது நிமிடம்), ரூபிந்தர் பால் சிங் (48, 59), அமித் ரோஹிதாஸ் (60-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

முடிவில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை ஊதித்தள்ளியது. இரண்டு ஆட்டங்களின் முடிவின் அடிப்படையில் இந்திய ஆண்கள் அணி 11-3 என்ற கோல் வித்தியாசத்தில் ரஷியாவை வெளியேற்றி 21-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.