இந்தியாவில், உலக கோப்பை ஆக்கி போட்டி: 2023-ம் ஆண்டு நடக்கிறது


இந்தியாவில், உலக கோப்பை ஆக்கி போட்டி: 2023-ம் ஆண்டு நடக்கிறது
x
தினத்தந்தி 8 Nov 2019 11:35 PM GMT (Updated: 8 Nov 2019 11:35 PM GMT)

இந்தியாவில், உலக கோப்பை ஆக்கி போட்டிகள் 2023-ம் ஆண்டு நடக்க உள்ளது.

லாசானே,

14-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இதில் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

2023-ம் ஆண்டுக்கான 15-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த இந்தியா, பெல்ஜியம், மலேசியா ஆகிய நாடுகள் உரிமை கோரின. 2023-ம் ஆண்டில் இந்தியா தனது 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நிறைவு செய்கிறது. இதை சிறப்பிக்கும் வகையிலும், நாட்டில் ஆக்கி விளையாட்டை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலும் இந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை மீண்டும் வழங்கும்படி இந்திய ஆக்கி சம்மேளனம் வற்புறுத்தியது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடந்த சர்வதேச ஆக்கி சம்மேளன கூட்டத்தில் 2023-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டில் ஜனவரி 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.

இதன் மூலம் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டியை அதிக முறை (4-வது முறை) நடத்தும் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. ஏற்கனவே 1982-ம் ஆண்டு (மும்பை), 2010 (டெல்லி), 2018 (புவனேசுவரம்) ஆகிய ஆண்டுகளிலும் இந்த போட்டி இந்தியாவில் நடந்துள்ளது. ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நெதர்லாந்து 3 முறை நடத்தியுள்ளது.

பெண்கள் உலக கோப்பை போட்டியை 2022-ம் அண்டு ஸ்பெயின், நெதர்லாந்து இணைந்து நடத்த உள்ளன.


Next Story