ஆக்கி விளையாட்டின் புதிய ‘மாஸ்டர்கள்’


ஆக்கி விளையாட்டின் புதிய ‘மாஸ்டர்கள்’
x
தினத்தந்தி 7 Dec 2019 1:30 AM GMT (Updated: 6 Dec 2019 12:35 PM GMT)

இவர்கள்தான் ‘மாஸ்டர்ஸ் பெண்கள் ஆக்கி அணி’. இந்த அணியில் அங்கம் வகிக்கும் அத்தனை பேரும், ‘30 பிளஸ்’. அதில் பெரும்பாலானோர், 45 வயதில் தொடங்கி, 46 வயது எட்டியவர்கள். ஒருவருடத்திற்கு முன்புதான் இவர்கள் ஒரே அணியாக ஒன்றிணைந்தனர் என்றாலும், அதற்குள் இரண்டு சர்வதேச போட்டிகளை வென்றிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டியில், இறுதிப்போட்டி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்கள். அதே உத்வேகத்தோடு, அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் மாஸ்டர்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறார்கள்.

சென்னை எழும்பூரில் இருக்கும் ராதா கிருஷ்ணன் மைதானம்தான் இவர்களது பயிற்சிகளம். ஞாயிற்றுக்கிழமைதான் இவர்களது பயிற்சி தினம். இவர்களை சந்திக்க சென்றபோது, அணியின் கேப்டனான ரேகா, அணி பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘இதில் இருக்கும் அனைவருமே, ஆக்கி விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டவர்கள் எனலாம். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆக்கி விளையாடுகிறோம். எலினா என்பவர், 3 வயதில் இருந்தே ஆக்கி விளையாடுகிறார். நாங்கள் மாநிலம், மாவட்டம், தேசியம் என ஏதோ ஒரு அணிக்காக, ஒன்றாக விளையாடியவர்கள். ஆனால் திருமணம், வேலை, குழந்தைகள் போன்ற குடும்ப சூழலால், நாங்கள் பிரிக்கப்பட்டோம். ஆனாலும் நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வது ஆக்கி பற்றித்தான். இப்படியே வருடங்கள் வேகமாக ஓடிவிட, ‘மீண்டும் சந்தித்தால் என்ன?’ என்று தோன்றியது. உடனே ஒன்று கூடினோம். ஆக்கி பற்றி நிறைய பேசினோம். அந்தசமயம்தான், ‘மாஸ்டர்ஸ் ஆக்கி’ விளையாட்டு போட்டிகள் பற்றி தெரிய வந்தது. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் ‘மாஸ்டர்ஸ்’ விளையாட்டுகளில் பங்கேற்கலாம் என்பதால், எல்லோர் மனதிலும் ‘நாம் ஏன் பங்கேற்கக் கூடாது?’ என்ற கேள்வி எழுந்தது. உடனே காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தஆக்கி மட்டையை கையில் எடுத்தோம். மீண்டும் ஆக்கி களத்திற்குள் புகுந்தோம். இதோ, இன்று 2 சர்வதேச வெற்றிகளுடன், மொத்தம் 4 வெற்றிகள் எங்கள் கைவசம் இருக்கிறது’’ என்றார், மகிழ்ச்சியாக.

20 வருடங்களுக்கு முன்பு, இவர்கள் அனை வருமே பிசியான ஆக்கி வீரர்கள். தேசிய அணிக்கான பயிற்சி முகாம் வரை சென்று திரும்பியவர்கள். இந்திய அணிக்காக விளையாட ஏங்கி, அது நிறைவேறாத காரணத்தால் அரசு வேலை, குடும்பம் என செட்டிலாகி இருக்கிறார்கள். ‘16 வயதில்’ நிறைவேறாத தேசிய அணி ஆசையை, ‘36 வயதில்’ நிறைவேற்ற முயன்றிருக்கிறார்கள். இந்த 20 வருட இடைவெளி, இவர்களை எந்தெந்த சமூக பொறுப்பு களில் அமர வைத்திருக்கிறது என்பதை, அணியின் சீனியர் ஷீலா சுகுமார் விளக்கினார்.

‘‘எலினா, ஸ்ரீலதா, சாருமதி, லட்சுமி, லாவண்யா, ரஸ்னா, தெரசா பெல்லா, மேனகா, டீனா, திலகம், தேன்மொழி, ராஜேஸ்வரி, ரேகா, அனிதாவுடன் என்னையும் சேர்த்து மொத்தமாக பதினைந்து பேர் கொண்ட டீம் இது. இதில் லதா நெய்வேலியில் உள்ள பள்ளிக் கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்கிறார். இதேபோல, மேனகாவும், தெரசா பெல்லாவும் சென்னையில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய் கிறார்கள். திலகம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தேன்மொழி தலைமைக் காவலராகவும் பணியாற்றுகிறார்கள். டீனா ஆர்.பி.எப். படையில் பணியாற்று கிறார். அணி கேப்டனான ரேகா தொழில் முனைவோராக இருக்கிறார். ராஜேஸ்வரி வங்கியில் வேலை செய்கிறார். மற்றவர்கள், குடும்ப தலைவியாக இருக்கிறார்கள். 20 வருட இடைவெளி, ஆக்கி வீராங்கனைகளை பல்வேறு சமூக பொறுப்புகளில் அமர வைத்திருக்கிறது’’ என்றவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆக்கி மட்டையை கையில் தூக்கிய அனுபவத்தை கூறினார்.

‘‘ரேகாவின் ஒருங்கிணைப்பு எங்களை ஒரே அணியாக ஒன்று சேர்த்தது. ‘வார்ம்-அப்’, பயிற்சி என எதுவுமின்றி, ‘சென்னை லீக்’ போட்டியில் கலந்து கொண்டோம். ‘டீன்-ஏஜ்’ பருவத்தில் இருந்த வேகமும், துடிப்பும் குறைந்திருந்தது. ஓட்டத்திறனிலும் கொஞ்சம் பின்தங்கினோம். இருப்பினும் எங்களின் அனுபவ வியூகத்தால் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றோம். 20 வருடங்களுக்கு பிறகு கிடைத்த அந்த வெற்றிதான், எங்களை உற்சாகமாக பயணிக்க வைத்தது’’ என்று உற்சாகமாகவே முடித்தார்.



சென்னை லீக் தொடரைத் தொடர்ந்து, டேராடூனில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இந்த அணியினர். அடுத்ததாக, ‘ஐரோப்பிய மாஸ்டர்ஸ்’ தொடரில் வெண்கலப் பதக்கம் பெற்று, ‘ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் ஆக்கி’ போட்டிக்கும் தேர்வாகி, அதில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்கள்.

‘‘குறுகிய காலத்தில், குறிப்பிட்ட வெற்றிகளை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அணிக்கு என பிரத்யேக பயிற்சியாளர் கிடையாது. பிரத்யேக பிசியோதெரபிஸ்ட் கிடையாது. இருப் பினும் நாங்கள் சிறப்பான அணியாகவே திகழ் கிறோம். அணியில் அங்கம் வகிக்கும் 15 பேரும் பல்வேறு அணிகளில், பலகாலமாக விளையாடுபவர்கள். அதனால் அணியின் சாதக, பாதக விஷயங்களை கவனித்து, தவறுகளை உடனுக்குடன் திருத்திக்கொள்கிறோம்.

மேலும் என்னுடன் சேர்த்து அணியில் மூன்று உடற்கல்வி ஆசிரியர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அதனால் ஆக்கி விளையாட கற்றுக்கொடுக்கிறோம். அதேசமயம் பள்ளி மாணவர்களிடம் இருக்கும் புதுப்புது விளையாட்டு நுணுக்கங்களையும் கற்றறிந்து, அதை மற்ற அணியினருக்கும் கற்றுக்கொடுக்கிறோம். கருத்துகளை பரிமாறிக் கொள்வதும், வேலைகளை பகிர்ந்து கொள்வதுமே அணியை பலப்படுத்துகிறது.’’ என்றார், தெரசா பெல்லா. இவரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் வெள்ளி பதக்கம் வென்ற அனுபவங்களை, காவல் ஆய்வாளர் திலகம் கார்த்திக் பகிர்ந்து கொண்டார்.

‘‘பல உலக நாடுகளில் மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடு சென்றுவர பண வசதியும், விசா உள்ளிட்ட பிரச்சினைகளும் இல்லாத பட்சத்தில் எந்த மாநிலத்தில் இருந்தும், இந்த போட்டி களுக்கு செல்லலாம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூக பொறுப்புகளில் இருந்தாலும், பொருளாதார தேவை என்பது பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது.

ஆஸ்திரேலியா போட்டியில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. இது எங்களுக்கு பெரிய தொகை. இருந்தாலும் இந்தியாவிற்காக, தேசிய அளவில் விளையாட வேண்டும் என்ற ஆசையில், வங்கி கடன் தொடங்கி வட்டி கடன் வரை முயற்சித்து, ரூ.3லட்சத்தை புரட்டினோம். எல்லாம் தயார் என்ற நிலையில் ஆஸ்திரேலிய விசாவில் பிரச்சினை வலுத்தது. நாளை விமானத்தில் பறக்கவேண்டிய கட்டாயத்தில் நள்ளிரவு வரை விசா கிடைக்காமல் திண்டாடினோம். இறுதியில் அணியின் கேப்டன் ரேகாவின் முயற்சியால், எப்படியோ விசா பிரச்சினை சுமூக முடிவிற்கு வந்தது.

சிலருக்கு ஆஸ்திரேலியா சென்று வர விடுமுறை கிடைப்பதில்கூட சிக்கல் இருந்தது. ஒருசிலர் சொந்த விடுப்பில் (லாஸ் ஆப் பே) ஆஸ்திரேலியா கிளம்பவும் தயாராகினர். இறுதியில் எல்லா தடைகளும் விலகி, ஆஸ்திரேலியாவிற்கு பறந்தோம். பல அணிகளை தோற்கடித்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும், தங்கப்பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டோம்’’ என்று வருத்தப்படும் திலகம் கார்த்திக், வரவிருக்கும் போட்டி களில் எதிரணியை ‘ஒரு கை’ பார்த்துவிடலாம் என நம்பிக்கையூட்டினார்.

40 பிளஸ் வீராங்கனைகள் நிரம்பி வழியும் இந்த சீனியர் அணியில், ஒரு ஜூனியர் வீராங்கனையும் இருக்கிறார். அவர்தான் 31 வயதான ‘ரஸ்னா’. ஆஸ்திரேலியா போட்டியில் அதிக கோல்களை அடித்து, அணியை வலுப்படுத்தியவரும் இவரே. சீனியர் வீராங்கனைகளுடன் விளையாடுவது பற்றி ஜூனியர் வீராங்கனையான அவர் சொல்வதை பார்ப்போம்.

‘‘நான் ஜூனியர் அணியிலும் விளையாடுகிறேன். சீனியர் அணியிலும் விளையாடுகிறேன். இவ்விரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. வேகம் மட்டுமே சிறு குறையாக தெரிகிறது. அதை மேம்படுத்தும் பயிற்சியில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறோம். இவர்கள் அனைவரும் பிசியான வேலையில் இருப்பவர்கள். போலீஸ், வழக்கறிஞர் போன்ற அன்றாட வேலையோடு சேர்த்து, குடும்பத்தையும் கவனிக்கிறார்கள். அப்படி இருந்தும், கிடைக்கும் ஓரிரு விடுமுறை தினங்களில் சரியான நேரத்திற்கு, ஆக்கி களத்திற்குள் ஆஜராகிவிடுகிறார்கள். ஒருசில போட்டிகளில் சீனியர்களுக்கு பலமாக அடிப்படும்.திலகம், ரேகா போன்றோருக்கு எலும்பு முறிவும் நிகழ்ந்திருக்கிறது. தேன்மொழிக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் ஆக்கி களத்திற்குள் நுழைகிறார்கள். ‘ஆக்கி’ என்ற மந்திரம்தான் இவர்களை இப்படி ஆட்டிப்படைக்கிறது.

சீனியர் அணிக்குள், ஜூனியரான நான் நுழைந்தபோது ஒருவித பய உணர்வு இருந்தது. சீனியர் அணியில் நான்தான் ‘ஜூனியர்’ என்பதால் என்னை இரு கோல் முனைகளுக்கும் ஓடவிட்டுவிடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் எனக்கு இணையாக ஓடி வந்து, என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். சீனியர் அணியில் விளையாடினாலும், ஜூனியர் அணியை போலவே உணர்கிறேன். ’’ என்று உற்சாகமாக முடித்தார்.

இந்த அணியோடு விளையாட சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறார், ராஜேஸ்வரி. இவர் கோல் கீப்பராக விளையாடியிருக்கிறார்.

“வெள்ளிப்பதக்கம் வென்றுவிட்டோம். அடுத்ததாக இந்தியாவிற்காக தங்கம் வெல்வதுதான் எங்கள் அணியின் லட்சியம்.’’ என்றுசொல்லி முடிக்கிறார்,3 வயதில் இருந்து ஆக்கி மட்டையை சுழற்றும் எலினா.

Next Story