ஹாக்கி

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ஆக்கி வீராங்கனை சுனிதா லக்ரா ஓய்வு + "||" + International competition Indian Hocky Hero Sunita Lakra rest

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ஆக்கி வீராங்கனை சுனிதா லக்ரா ஓய்வு

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ஆக்கி வீராங்கனை சுனிதா லக்ரா ஓய்வு
இந்திய ஆக்கி அணியின் பின்கள வீராங்கனை சுனிதா லக்ரா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் பின்கள வீராங்கனையான சுனிதா லக்ரா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


இன்றைய தினம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாளாகும். சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற நான் முடிவு எடுத்துள்ளேன். 30 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தியா முதல்முறையாக பங்கேற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணிக்காக விளையாடியதை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வரும் இந்திய ஆக்கி அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். முழங்காலில் ஏற்பட்ட காயம் எனது ஒலிம்பிக் கனவை தகர்த்து விட்டது.

வருங்காலத்தில் எனது முழங்காலில் மற்றொரு ஆபரேஷன் செய்ய வேண்டியது அவசியமானதாகும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்ட எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். இந்திய அணிக்காக விளையாடியதன் மூலம் பெற்ற சில நல்ல நினைவுகள் என் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். காயம் அடைந்த காலத்தில் எனக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்த ஆக்கி இந்தியா அமைப்புக்கும், எனக்கு பிடித்தமான ஆக்கி ஆட்டத்தை நீண்ட நாட்கள் விளையாட ஆதரவு அளித்த குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சுனிதா லக்ரா கூறியுள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த 28 வயதான சுனிதா லக்ரா இந்திய அணிக்காக 139 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். 2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த சுனிதா லக்ரா 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் வகித்து இருக்கிறார். அந்த போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அற்புதமான ஆக்கி வாழ்க்கையை பெற்ற சுனிதாவுக்கு வாழ்த்துகள். கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் களத்திலும், ஓய்வறையிலும் பகிர்ந்து கொண்ட சிறந்த தருணங்கள் மறக்க முடியாதவை. இனி அவற்றை தவறவிடுகிறேன். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.