புரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி


புரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
x
தினத்தந்தி 19 Jan 2020 12:09 AM GMT (Updated: 19 Jan 2020 12:09 AM GMT)

புரோ லீக் ஆக்கி போட்டியின், தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

புவனேசுவரம்,

உலகின் தலைசிறந்த 9 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ லீக் ஆக்கி போட்டி தொடர் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நேற்று தொடங்கியது. ஜூன் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டி பல்வேறு நாடுகளில் அரங்கேறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். புவனேசுவரத்தில் நேற்று இரவு நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 3-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே துடிப்புடன் செயல்பட்ட இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் ரூபிந்தர் பால் சிங் 2 கோலும் (12-வது, 46-வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (முதல் நிமிடம்), கேப்டன் மன்தீப்சிங் (34-வது நிமிடம்), லலித் உபாத்யாய் (36-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் ஜிப் ஜான்சென் (14-வது நிமிடம்), ஜெரோன் ஹெர்ட்பெர்ஜெர் (28-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினார்கள். இதே மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மீண்டும் மோதுகின்றன.


Next Story