புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா


புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 23 Feb 2020 12:14 AM GMT (Updated: 23 Feb 2020 12:14 AM GMT)

புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.

புவனேசுவரம்,

9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேசுவரத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய அணி நேற்று மீண்டும் அந்த அணியுடன் கோதாவில் இறங்கியது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்திய தரப்பில் ருபிந்தர் பால் சிங் (25-வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (27-வது நிமிடம்) ஆகியோர் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடித்தனர். இதையடுத்து ஆட்டத்தின் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் 3 வாய்ப்புகளையும் ஹர்மன்பிரீத், விவேக் சாகர் பிரசாத், லலித் உபத்யாய் ஆகியோர் கோலாக்கினர். ஆஸ்திரேலிய தரப்பில் முதல் வாய்ப்பில் டேனியல் பியலே கோலாக்கினார். அடுத்த 3 வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், ஆஸ்திரேலிய வீரர்களின் முயற்சியை அருமையாக முறியடித்தார். முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து போனஸ் புள்ளியை தட்டி சென்றது.

இதுவரை 6 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவும் 6 ஆட்டங்களில் 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. ஆனால் கோல் வித்தியாசம் அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஏப்ரல் 25, 26-ந்தேதிகளில் ஜெர்மனியை சந்திக்கிறது.


Next Story