சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி


சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 7 March 2020 11:36 PM GMT (Updated: 7 March 2020 11:36 PM GMT)

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 8-1 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப் அணியை எளிதில் தோற்கடித்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியில் ஹர்மன்பிரீத் சிங் 3 கோலும், மனோஜ் ஜோஜோ 2 கோலும் அடித்தனர். இந்திரா காந்தி கிளப் அணியில் ஆலன் ரூபன் ராஜ் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) அணியை வீழ்த்தியது. ஐ.சி.எப். அணியில் சாஹில் 2 கோலும், அஸ்வின் குஜூர் ஒரு கோலும் அடித்தனர். எஸ்.டி.ஏ.டி. அணி தரப்பில் சுந்தர பாண்டி 2 கோல் அடித்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுக கழக அணியை சாய்த்தது. இந்தியன் வங்கி அணியில் செந்தில்குமார், ஸ்ரீகாந்த், ஸ்டாலின் அபிலாஷ், சில்வர் ஸ்டாலின் தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை துறைமுக கழக அணியில் சுரேஷ் பாபு ஒரு கோல் திருப்பினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே-சென்னை மாநகர போலீஸ் (காலை 7 மணி), ஏ.ஜி.அலுவலகம்-இந்திரா காந்தி கிளப் (காலை 9 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி (பிற்பகல் 2 மணி), இந்திய விளையாட்டு ஆணையம்-எஸ்.டி.ஏ.டி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story