கொரோனா பீதிக்கு மத்தியிலும் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் தொடர்ந்து பயிற்சி


கொரோனா பீதிக்கு மத்தியிலும் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் தொடர்ந்து பயிற்சி
x
தினத்தந்தி 22 March 2020 12:34 AM GMT (Updated: 22 March 2020 12:34 AM GMT)

கொரோனா பீதிக்கு மத்தியிலும் இந்திய ஆக்கி அணிகளின் ஒலிம்பிக் பயிற்சி தடையின்றி தொடருகிறது.

பெங்களூரு,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஆக்கி அணியும், பெண்கள் ஆக்கி அணியும் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த முறை ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இவ்விரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

கொரோனா அச்சம் ஒரு பக்கம் கலங்கடித்தாலும் இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சிக்கு பாதிப்பு இல்லை.

பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க இங்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதே போல் உரிய அங்கீகார அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இது குறித்து இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில், ‘கொரோனாவின் ருத்ரதாண் டவத்தால் எங்கள் பயிற்சி திட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. பயிற்சிக்கு இடையே அடிக்கடி கைகளை கழுவுகிறோம். தொடர்ந்து உடலின் வெப்பநிலை அளவையும் சோதித்துக் கொள்கிறோம். ‘சாய்’ மையத்தில் நாங்கள் பாதுகாப்பான சூழலில் பயிற்சி மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். சாய் மற்றும் எங்களது பயிற்சியாளர்கள் அளிக்கும் ஊக்கத்துடன் நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்காக கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.

பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக ‘சாய்’ போன்ற எல்லா வசதிகளும் கூடிய இடம் எங்களுக்கு கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கிறோம். எங்களது உடல் ஆரோக்கியம் தினமும் கண்காணிக்கப்படுகிறது. நாங்கள் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறோம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்வதே எங்களது லட்சியம். அதில் தொடர்ந்து கவனம் செலுத்த சாய் விளையாட்டு அதிகாரிகள் எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள்’ என்றார்.

ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தையும், பெண்கள் அணி நெதர்லாந்தையும் சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இவ்விரு ஆட்டங்களும் ஜூலை 25-ந்தேதி நடக்கிறது.


Next Story