ஹாக்கி

ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம் + "||" + 3 gold medal winning Olympic legend Balbir Singh of India passed away

ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்

ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்
ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியர் நேற்று மரணம் அடைந்தார்.
சண்டிகார்,

இந்திய ஆக்கி அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கியவரும், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் 3 முறை அங்கம் வகித்தவருமான பல்பீர் சிங் சீனியர் கடந்த 2 வருடங்களாக நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பலமுறை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 8-ந் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பல்பீர் சிங் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போதே அவருக்கு 3 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மிகவும் மோசமானது. அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 6.30 மணியளவில் பல்பீர் சிங் உயிர் பிரிந்தது. 95 வயதான பல்பீர்சிங்குக்கு ஒரு மகள், 3 மகன்கள் இருக்கின்றனர்.

உலக விளையாட்டு அரங்கில் இந்திய ஆக்கி அணியின் உயர்வான செயல்பாட்டுக்கு தயான் சந்துக்கு அடுத்தபடியாக பல்பீர் சிங்கின் பங்களிப்பு முக்கியமானதாகும் என்றால் மிகையாகாது. பஞ்சாப் போலீசில் பணியாற்றிய பல்பீர்சிங் 1947 முதல் 1958-ம் ஆண்டு வரை இந்திய ஆக்கி அணிக்காக விளையாடினார். 1948 (லண்டன்), 1952 (ஹெல்சிங்கி), 1956 (மெல்போர்ன்) ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் தவிர்க்க முடியாத நடுகள வீரராக விளங்கினார். 1956-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் கேப்டன் பொறுப்பையும் அவர் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1957-ம் ஆண்டில் மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருதை கைப்பற்றிய பல்பீர் சிங் அந்த விருதை பெற்ற முதல் ஆக்கி வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தினார். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தேர்வு செய்த 16 ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான பல்பீர் சிங் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் ஆக்கி இறுதி ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனைக்கு இன்னும் சொந்தக்காரராக உள்ளார். 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. அந்த ஆட்டத்தில் பல்பீர்சிங் 5 கோல்கள் அடித்து அசத்தினார். இதுவே ஒலிம்பிக் ஆக்கி இறுதிப்போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச கோலாகும். இதுவரை இந்த சாதனை எந்தவொரு வீரராலும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

ஓய்வுக்கு பிறகு பல்பீர் சிங் இந்திய ஆக்கி அணியின் மானேஜராகவும் திறம்பட பணியாற்றினார். அஜித் பால் சிங் தலைமையில் இந்திய ஆக்கி அணி முதல்முறையாக 1975-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தது. அப்போது அணியின் மானேஜராக பல்பீர் சிங் இருந்தார். மேலும் பஞ்சாப் மாநில விளையாட்டு கவுன்சில் செயலாளராகவும் அவர் செயல்பட்டு இருக்கிறார்.

இந்திய ஆக்கி சகாப்தம் பல்பீர் சிங் மறைவுக்கு ஆக்கி உலகத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் தனது இரங்கல் பதிவில், ‘பல்பீர் சிங் சீனியரின் மறைவு கேட்டு வருத்தம் அடைந்தேன். ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அவர் இந்தியாவின் மகத்தான விளையாட்டு வீரர்களில் ஒருவர். அவருடைய சாதனைகள் வருங்கால தலைமுறைக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ஆழ்ந்த அனுதாபத்தை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில், ‘தனது மறக்க முடியாத விளையாட்டு திறமையின் மூலம் பல்பீர் சிங் சீனியர் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அவர் நாட்டுக்கு நிறைய பெருமையையும், வெற்றியையும் சேர்த்து இருக்கிறார். அவர் அருமையான ஆக்கி வீரர். அத்துடன் அவர் சிறந்த வழிகாட்டியாகவும் முத்திரை பதித்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கம், ஆக்கி இந்தியா அமைப்பு சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங், கவர்னர் வி.பி.சிங் பத்னோர், சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் நரிந்தர் பத்ரா, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா, இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட்கோலி, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், இந்திய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன்கள் அஜித் பால்சிங், சர்தார் சிங், வீரென் ரஸ்குயின்ஹா, ஸ்ரீஜேஷ், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாலையில் அங்குள்ள மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் பல்பீர் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. 

மொகாலி ஸ்டேடியத்துக்கு பல்பீர் சிங் பெயர் சூட்டப்படும் என்று பஞ்சாப் மாநில விளையாட்டு மந்திரி ரானா குர்மித் சிங் சோதி அறிவித்துள்ளார்.