டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்ல வாய்ப்பு முன்னாள் கேப்டன் சர்தார்சிங் நம்பிக்கை


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்ல வாய்ப்பு முன்னாள் கேப்டன் சர்தார்சிங் நம்பிக்கை
x
தினத்தந்தி 20 July 2020 9:30 PM GMT (Updated: 20 July 2020 7:38 PM GMT)

தற்போதைய இந்திய ஆக்கி அணி உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான 34 வயது சர்தார்சிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

தற்போதைய இந்திய ஆக்கி அணி உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். நாட்டுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுக்க முடியவில்லையே? என்ற வருத்தம் எனக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் தற்போதைய இந்திய அணி வளர்ந்து வரும் பாங்கு மற்றும் இந்த ஆண்டில் நடந்த புரோ லீக் போட்டியில் ஆடிய விதம் ஆகியவற்றை பார்க்கையில் நீண்ட காலமாக நமக்கு கிடைக்காமல் இருக்கும் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்து இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்ல நம்பத்தகுந்த வாய்ப்புள்ளது.

ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டு இருப்பது இளம் வீரர்களின் திறமையை மெருகேற்றுவதற்கும், அணியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தவற்கும் நல்ல வாய்ப்பாகும். பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவது நமக்கு தொடரும் ஒரு பிரச்சினையாகும். இந்த விஷயத்தில் கடந்த 2 அல்லது 3 ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து நாம் நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறோம். கொரோனா பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது இந்திய வீரர்களுக்கு அதிக சவாலாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் நமது ஆக்கி அணி வீரர், வீராங்கனைகள் தங்கள் இலக்கு மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story