கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்
x
தினத்தந்தி 12 Aug 2020 1:17 AM GMT (Updated: 12 Aug 2020 1:17 AM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 6 வீரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியினருக்கான தேசிய பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்க இந்திய ஆக்கி அணியின் வீரர், வீராங்கனைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பெங்களூருக்கு வந்தனர்.

பயிற்சி முகாமில் பங்கேற்க வந்துள்ள 33 வீரர்கள் மற்றும் 24 வீராங்கனைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவில் இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர்குமார், ஜஸ்கரன்சிங், வருண்குமார், கிரிஷன் பஹதுர் பதாக் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது. மேலும் முன்கள வீரர் மன்தீப்சிங்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. 6 வீரர்களையும் சாய் வளாகத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் மன்தீப் சிங்குக்கு கொரோனாவின் தாக்கம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சாய் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திங்கட்கிழமை இரவு மன்தீப் சிங்கின் ரத்தத்தில் உள்ள ஆக் சிஜன் அளவு வழக்கத்தை விட குறைவாக இருப்பது மருத்துவ கண்காணிப்பில் கண்டறியப்பட்டது. இது கொரோனாவின் தாக்கம் அவருக்கு லேசான நிலையில் இருந்து மிதமானதாக மாறுவதை காட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான மன்தீப் சிங் இந்திய அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 60 கோல்கள் அடித்துள்ளார். 2018-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர் ஆவார்.

6 வீரர்கள் பாதிப்பு எதிரொலியாக இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சி முகாமை குறிப்பிட்ட தேதியில் தொடங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று சாய் வட்டாரங்கள் தெரிவித்தன. ஓய்வின் போது வீரர்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்காதது தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் வீராங்கனைகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் பெண்கள் அணியின் பயிற்சி முகாமை தொடங்குவதில் சிக்கல் இருக்காது.

இந்த சம்பவம் குறித்து இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் அஜித்பால் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய ஆக்கி அணி வீரர்கள் கட்டாயம் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். வீரர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமானதாகும். இந்த தருணத்தில் விளையாட்டை விட வாழ்க்கை தான் மிகவும் மதிப்புமிக்கது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எந்தவித போட்டியும் இல்லாத நிலையில் யிற்சி முகாமை தற்போது தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது எனக்கு புரியவில்லை’ என்றார்.

Next Story