இந்திய ஹாக்கி அணியின் நம்பகமான வீரராக வர விரும்புவதாக இளம் வீரர் ஷாம்ஷேர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்,
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் ஹாக்கி வீரர் ஷாம்ஷேர் சிங், கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்திய சீனியர் ஹாக்கி அணியில் இடம்பிடித்தார். இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்று பெற்றது மறக்கமுடியாத அனுபவம் என்று கூறும் ஷாம்ஷேர், இந்த போட்டியில் இந்திய சீனியர் ஹாக்கி அணிக்கான தனது முதல் கோலை அடித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற எஃப்.ஐ.எச் ஜூனியர் உலக கோப்பை இறுதி ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது, தானும் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற வேண்டும் என்ற கனவு உருவானதாக ஷாம்ஷேர் கூறியுள்ளார். தனது கனவு நிறைவேற கடந்த கால வாழ்க்கையின் அனுபவங்கள் உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷாம்ஷேர் கூறுகையில், “நான் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். எனது தந்தை விவசாயம் செய்து வருகிறார். நான் ஹாக்கி விளையாட தொடங்கிய நாட்களில் ஹாக்கி பேட், காலணிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் கூட மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா பரவல் சூழ்நிலை நிலவி வரும் வேளையில், தனது வருங்காலத்திற்கு தேவையானவற்றை கவனமாக செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறிகையில், “நான் எனது இலக்குகளில் கவனம் செலுத்துகிறேன். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகளில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அணியின் மூத்த வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் நிறையே அனுபவத்தைப் பெற முடியும். எனது பயிற்சியாளரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, இந்திய ஹாக்கி அணியின் நம்பகமான வீரராக மாற வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று ஷாம்ஷேர் தெரிவித்துள்ளார்.