உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ஒடிசாவில் அமைய உள்ளது. அங்கு 2023 ஆம் ஆண்டு ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
புவனேஸ்வர்
ஒடிசா முதல்வர் நவீன்பட் நாயக் 20,000 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்தியாவிலே மிக பெரிய ஹாக்கி மைதானம் அமைய உள்ளதாக அறிவித்துள்ளார். ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவில் அமைய உள்ள இந்த மைதானத்தில் 2023- க்கான ஹாக்கி உலக கோப்பையை நடத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய ஹாக்கிக்கு சுந்தர்கர் அளித்த பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ரூர்கேலாவில் 20,000 பேர் அமரக்கூடிய புதிய சர்வதேச அளவிலான அரங்கத்தை கட்டுவோம் என்று அறிவிக்க விரும்புகிறேன்.இந்த அரங்கத்தில் அனைத்து நவீன வசதிகளும் இருக்கும், மேலும் இது ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும். இது உலகின் பீல்ட் ஹாக்கிக்கான சிறந்த இடமாக இருக்கும் என்று நம்புகிறேன்,
“2023- க்கான உலக ஹாக்கி கோப்பை போட்டியை தலைநகர் புவனேஸ்வரிலும், சுந்தர்கர் மாவட்டத்திலும் நடத்த உள்ளோம். அதற்காக 15 ஏக்கர் நிலப்பரப்பில் பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், இந்தியாவிலே மிக பெரிய ஹாக்கி மைதானம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். மற்றும் சுந்தர்கர் மாவட்டத்தில் 17 செயற்கை மைதானங்களை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் இந்தியாவின் ஹாக்கி விளையாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல உள்ளோம்.
இந்திய ஹாக்கியில் ஜாம்பவன்களாக திகழும் திலீப் டிர்கி மற்றும் சுனிதா லக்ரா இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களை போல இன்னும் நிறைய ஜாம்பவான்களை இந்த மைதானம் உருவாக்கும் என நம்புகிறோம். அதற்கவே உலக தரம் வாய்ந்த மைதானமாக கட்டமைக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலதின் மூத்த அதிகாரிகள், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்), மற்றும் இந்திய ஹாக்கி விளையாட்டு குழுமம் போன்ற உயர் மட்ட அதிகாரிகள் கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. உலக கோப்பையை நடத்துவதற்கு நகரத்தில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
சுந்தர்கர் மாவட்டத்தின் 17 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் செயற்கை ஹாக்கி தரை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.