அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி வெற்றி


அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி வெற்றி
x
தினத்தந்தி 7 April 2021 11:04 PM GMT (Updated: 7 April 2021 11:04 PM GMT)

2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 10, 11-ந் தேதிகளில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் நடக்கிறது.

இதற்கு முன்னோட்டமாக இந்தியா-ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணிகள் இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பியூனஸ்அயர்சில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணியில் நீலகண்ட ஷர்மா (16-வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (28-வது நிமிடம்), ரூபிந்தர் பால்சிங் (33-வது நிமிடம்), வருண்குமார் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். அர்ஜென்டினா அணி தரப்பில் லியாண்ட்ரோ டாலினி (35-வது மற்றும் 53-வது நிமிடம்) 2 கோலும், மாய்கோ கேசில்லா (41-வது நிமிடம்) ஒரு கோலும் திருப்பினார்கள்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கருத்து தெரிவிக்கையில், ‘இரு அணிகளும் தீவிரமாக போராடிய இந்த போட்டி நல்ல பயிற்சியாக அமைந்தது. ஒலிம்பிக் சாம்பியன் அணிக்கு எதிரான இந்த வெற்றி சிறப்பானதாகும். அத்துடன் இது நமது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். மூன்றாவது கால்பகுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி சரிவில் இருந்து மீண்டு 2 கோல்களை திருப்பியது. வலுவான அணிக்கு எதிராக விளையாடுகையில் போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆட்டம் புரோ லீக் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக நமது அணி சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும்’ என்றார்.


Next Story