கோவில்பட்டியில் இருந்து ‘இளம் ஆக்கி நட்சத்திரம்'


கோவில்பட்டியில் இருந்து ‘இளம் ஆக்கி நட்சத்திரம்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:21 PM GMT (Updated: 19 Jun 2021 4:21 PM GMT)

ஆக்கி விளையாட்டு வீரர்களை அதிகளவில் உருவாக்கும் ஊர்களில், திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் கோவில்பட்டியும் ஒன்று. மாநில-தேசிய அளவிலான ஆக்கி வீரர்களை, கோவில்பட்டி உருவாக்கியிருக்கிறது. அந்த பட்டியலில், இளம் நம்பிக்கை நட்சத்திரமாக இடம்பிடித்திருக்கிறார், மாரீஸ்வரன்.

ஆக்கி விளையாட்டில் தூள் கிளப்பி வரும் இவர், ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இதற்காக பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் மாரீஸ்வரனிடம் சிறு நேர்காணல்.

* ஆக்கி மட்டையை நீங்கள் கையில் தூக்கியது எப்படி?

என்னுடைய ஊருக்கும், ஆக்கி விளையாட்டிற்கும் நெருங்கிய பந்தம் உண்டு. அதன் காரணமாய், ஊரிலும், அக்கம்-பக்கத்து ஊர்களிலும் நடக்கும் ஆக்கி விளையாட்டை கண்டு கழிக்க, என் தந்தை செல்வதோடு, என்னையும் அழைத்து செல்வார். அதன் மூலமாகவே, ஆக்கி எனக்கு அறிமுகமானது. 6-ம் வகுப்பிலிருந்து ஆக்கி விளையாட தொடங்கினேன்.

* ஆக்கி விளையாட்டில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியது எப்போது?

9-ம் வகுப்பு படிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (எஸ்.டி.ஏ.டி.) இணைந்து ஆக்கி விளையாட்டை முறைப்படி கற்றுக்கொண்டேன். அங்கிருந்து நிறைய போட்டிகளில், தீவிரமாக விளையாடினேன். அதோடு கல்வி அறிவையும் வளர்த்துக்கொண்டேன். இப்போது கோவில்பட்டி அரசு கல்லூரியில் எம்.காம் படித்துக்கொண்டே, ஆக்கி விளையாடி வருகிறேன்.

* திருப்பம் தந்த விளையாட்டு போட்டி எது?

2019-ம் ஆண்டு மதுரையில் நடந்த மாநில அளவிலான போட்டியில், தூத்துக்குடி அணிக்காக விளையாடினேன். எல்லா அணிகளுக்கும் எதிராக சிறப்பாக விளையாடியதோடு, 3 கோல்களை அடித்தேன். என்னுடைய தனித்துவமான ஆட்டத்திற்கு, சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது. அதோடு ஆக்கி விளையாட்டில், எனக்கான தனி முத்திரையையும் உருவாக்கினேன்.

* தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி எடுக்கிறீர்கள்?

ஒரு நாளைக்கு, இரு வேளை என 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் முத்துக்குமார், என்னை திறமையான ஆக்கி வீரராக செதுக்கிக் கொண்டிருக்கிறார். அவரது வழிகாட்டுதலில்தான், ஆக்கி பயின்று, இன்று தேசிய அணி வரை முன்னேறி இருக்கிறேன்.

* ஆக்கி விளையாட்டில் உங்களுடைய பணி என்ன?

'பார்வேர்ட்' பொசிஷனில் விளையாடுகிறேன். ஆக்கி பந்தை அதிரடியாக கடத்தி சென்று, எதிரணி கோல் போஸ்டிற்குள் கோல் அடிப்பதுதான் என்னுடைய வேலை. நிறைய விளையாட்டுகளில், என்னுடைய பணியை சரிவர செய்திருக்கிறேன்.

* உலக கோப்பை அணியில் இணைந்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வெகு விரைவில் கவுஹாத்தியில் ஆக்கி விளையாட்டிற்கான உலக கோப்பை போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன. அதில் ஜூனியர் அணிக்கான போட்டிகளும் அரங் கேறும். அதற்கு இப்போது முதலே பயிற்சிகள் தொடங்கிவிட்டன. அந்த பயிற்சி முகாமிற்குதான் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். அசத்தலான ஆட்டத்திறனும், அதிர்ஷ்டமும் கைக்கொடுக்கும் வகையில், நான் உலக கோப்பை அணியில் விளையாடுவேன். நிச்சயம் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

* உலக கோப்பைக்காக சிறப்பாக தயாராகிறீர்களா?

ஆம்..! முன்பைவிட, கூடுதலாக உழைக்கிறேன். பயிற்சி எடுக்கிறேன். என்னுடைய ஆட்டத்திறனை பயிற்சியாளர்களின் அறிவுறுத்தலின்படி மேம்படுத்தி வருகிறேன்.

* உங்களுடைய ஆசை, கனவு, லட்சியம்?

இவை எல்லாமே, ஒன்றுதான். ஆக்கி விளையாட்டில் சிறந்து விளங்கி, சீனியர் அணியில் இடம் பிடிக்கவேண்டும். அங்கிருந்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்று விளையாடி, இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுக்கவேண்டும்.

* விளையாட்டு ஆர்வத்திற்கு, குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கிறதா?

குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்கள். அப்பா, தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். எனக்கு ஒரு தம்பியும் உண்டு. குடும்ப செலவு, கல்வி செலவு... இவற்றுக்கு நடுவே, எனக்கான விளையாட்டு உபகரணங்களை அப்பா பொறுப்போடு வாங்கி கொடுப்பார். என்னுடைய விளையாட்டு ஆர்வத்திற்கு, அம்மாவும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. நண்பர்களும், பயிற்சியாளர்களும் எப்போதும் துணையாக இருப்பதால், பல பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை சமாளித்து முன்னேறி வருகிறேன்.

Next Story