டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆக்கி, மல்யுத்தத்தில் கொரோனா பாதித்தால் நிலைமை என்ன? புதிய விதிமுறை வெளியீடு


டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆக்கி, மல்யுத்தத்தில் கொரோனா பாதித்தால் நிலைமை என்ன? புதிய விதிமுறை வெளியீடு
x
தினத்தந்தி 12 July 2021 12:59 AM GMT (Updated: 2021-07-12T06:29:34+05:30)

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தில் 100 நாடுகளில் இருந்து 356 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தனிநபர் பிரிவில் களம் காணும் வீரர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் இறங்க அனுமதி இல்லை என்று போட்டிக்கான சிறப்பு விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது. அதே சமயம் துப்பாக்கி சுடுதல் அணிகளுக்கான கலப்பு பிரிவில் எவரேனும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்துள்ளது.

இதே போல் மற்ற போட்டிகளிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் எத்தகைய விதிமுறையை பின்பற்றுவது என்பதை ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது. மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் வீரரோ, வீராங்கனையோ கொரோனா தொற்றில் சிக்கினால் அவர் வெளியேற்றப்பட்டவராக கருதப்பட்டு அரைஇறுதியில் தோற்றவருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் கொரோனாவில் சிக்கியவருக்கு பதக்கம் அளிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவுப்படுத்தப்படவில்லை. தொடக்க சுற்றுகளில் இதே நிலை வந்தால் எதிராளிக்கு ‘பை’ சலுகை மூலம் அடுத்த சுற்று வாய்ப்பு வழங்கப்படும்.

தடகளத்தில் கொரோனாவினால் எந்த வீரராவது பங்கேற்க இயலாமல் போனால் முந்தைய சுற்றில் சிறந்த நிலையை பிடித்த வீரரை கொண்டு அந்த இடம் நிரப்பப்படும். ஆனால் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், மாரத்தான், நடை பந்தயத்திற்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது.

ஆக்கி விளையாட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளில் ஒன்று கொரோனாவினால் களம் இறங்க இயலாமல் போனால் அந்த அணி வெளியேற்றப்படும். அரைஇறுதியில் தோல்வி அடைந்த அணிகளில் ஒன்று இறுதிசுற்று அதிர்ஷ்டத்தை பெறும். அவ்வாறான சூழலில் அரைஇறுதியில் தோற்ற மற்றொரு அணிக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டம் தனியாக நடத்தப்படாது. ஒருவேளை இறுதிப்போட்டிக்கு வரும் இரு அணிகளுமே கொரோனாவினால் பாதித்து தனிமைப்படுத்தப்படும் நிலைமை வந்தால் என்னவாகும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Next Story