இழந்த பெருமையை மீட்குமா இந்திய ஆக்கி அணி?


இழந்த பெருமையை மீட்குமா இந்திய ஆக்கி அணி?
x
தினத்தந்தி 12 July 2021 11:57 PM GMT (Updated: 12 July 2021 11:57 PM GMT)

1928 முதல் 1956-ம் ஆண்டு வரை இந்திய ஆக்கி அணி தொடர்ச்சியாக 6 முறை தங்கத்தை தனதாக்கி தரணியில் கோலோச்சியது.

125 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 9 தங்கம் உள்பட 28 பதக்கங்களை வென்று இருக்கிறது. இதில் ஆக்கியில் மட்டும் அறுவடை செய்தது 8 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் ஆகும். 1928 முதல் 1956-ம் ஆண்டு வரை இந்திய ஆக்கி அணி தொடர்ச்சியாக 6 முறை தங்கத்தை தனதாக்கி தரணியில் கோலோச்சியது. அந்த பொற்காலம் முடிவுக்கு வந்து நீண்ட காலம் ஆகி விட்டதால் தற்போதைய புதிய தலைமுறை அதனை அறிந்து இருப்பது அரிதாகத் தான் இருக்கக்கூடும்.

1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வி.பாஸ்கரன் தலைமையிலான இந்திய ஆக்கி அணி கடைசியாக தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது. அது நடந்து 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அதன் பிறகு 8 முறை (2008-ம் ஆண்டு தகுதி பெறவில்லை) ஒலிம்பிக் போட்டிக்கு படையெடுத்தும் இந்திய அணிக்கு பதக்க மேடை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறதே தவிர மகிழ்ச்சிக்குரிய மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. கடந்த முறை (2016-ம் ஆண்டு ) இந்தியா 8-வது இடமே பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி புதிய நம்பிக்கையுடன் புறப்படுகிறது. நம் அணியில் இடம் பிடித்துள்ள கேப்டன் மன்பிரீத் சிங் (நடுகளம்), ஸ்ரீஜேஷ் (கோல் கீப்பர்), பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங் (மூவரும் பின்களம்), மன்தீப் சிங் (முன்களம்) ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். குறிப்பாக கேப்டனுக்கும், கோல்கீப்பருக்கும் இது 3-வது ஒலிம்பிக் ஆகும். ஷாம்ஷெர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித்குமார் உபாத்யாய் (முன்களம்), ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, சுமித் (நடுகளம்), சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ் (இருவரும் பின்களம்) ஆகியோருக்கு இது அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும்.

கொரோனா பரவல் காரணமாக இந்திய அணியின் சில வெளிநாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டாலும், பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் (ஆஸ்திரேலியா) மேற்பார்வையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது ஆட்டத்தை மெருகேற்றி வருகிறார்கள். நீண்டகாலமாக தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் மோதி திறமையை பட்டை தீட்டி இருக்கிறார்கள். 2018-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த இந்திய அணி, அதேஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 3-வது இடமும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டமும் வென்று ஒலிம்பிக் பயணத்துக்கு வலுவாகவே தயாராகியுள்ளது.

அத்துடன் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளை நமது அணி வீழ்த்தியது. 2020-2021-ம் ஆண்டுக்கான புரோ லீக் தொடரில் நெதர்லாந்து, உலக சாம்பியன் பெல்ஜியம், ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக இந்தியா வாகை சூடியது. அத்துடன் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவை பெனால்டி ஷூட்-அவுட்டில் சாய்த்து அதிர்ச்சி அளித்தது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு நமது அணி ஆஸ்திரேலியாவை அதட்டியது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றிகள் எல்லாம் நமது அணியின் நம்பிக்கையை நிச்சயம் அதிகரித்து இருக்கும். அதேவேளையில் பதக்க மேடையை நோக்கிய பயணத்தையும் வேகப்படுத்தி இருக்கிறது. எனவே இந்த முறை இந்திய ஆக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று ரசிகர்களின் நீண்ட கால தாகத்தை தணிப்பதுடன், இழந்த பெருமையையும் மீட்டெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அனுபவமும், இளமையும் சரிசம கலவையாக கொண்ட நமது அணி பதக்கத்தை கைப்பற்ற திறமையுடன், அதிர்ஷ்டமும் சரியான நேரத்தில் கைகொடுக்க வேண்டியது மட்டுமே பாக்கியாகும்.

இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜப்பான் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் நியூசிலாந்தை வருகிற 24-ந் தேதியும், ஆஸ்திரேலியாவை 25-ந்தேதியும், ஸ்பெயினை 27-ந்தேதியும், அர்ஜென்டினாவை 29-ந்தேதியும், ஜப்பானை 30-ந்தேதியும் எதிர்கொள்கிறது.

Next Story