டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்லும் - முன்னாள் கேப்டன் பாஸ்கரன் நம்பிக்கை


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்லும் - முன்னாள் கேப்டன் பாஸ்கரன் நம்பிக்கை
x
தினத்தந்தி 16 July 2021 12:20 AM GMT (Updated: 2021-07-16T05:50:50+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்லும் என்று முன்னாள் கேப்டன் பாஸ்கரன் தெரிவித்தார்.

சென்னை,

1980-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டனும், தெற்கு ரெயில்வே முன்னாள் சீனியர் விளையாட்டு அதிகாரியுமான வி.பாஸ்கரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விசித்திரமானதாக இருக்க போகிறது. வழக்கமாக ஒலிம்பிக் போட்டியில் கோலாகலத்துக்கு குறைவு இருக்காது. ஒலிம்பிக் கிராமத்துக்கு சென்ற பிறகு எல்லா நேரமும் அருமையான உபசரிப்பு கிடைக்கும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் வீரர்கள் உள்ளிட்டோர் போட்டி முடிந்ததும் நேராக தங்கும் அறைக்கு தான் செல்ல முடியும். முன்பு போல் இந்த முறை விளையாட்டு கிராமத்தில் எல்லா வசதிகளும் இருக்காது. இது நிச்சயம் எல்லா நாட்டினருக்கும் கடினமாக தான் இருக்கும். மேலும் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் கைத்தட்டல் உற்சாகம் எதுவும் கிடைக்காது. இந்த போட்டி வீரர்களின் மனவலிமையின் சோதனை களம் எனலாம். உங்களது மனதைரியத்தை பொறுத்தே சாதிக்க முடியும்.

ஆக்கி போட்டியில் லீக் சுற்றில் முதலிடத்தை பிடிக்கும் இலக்குடன் இந்திய அணி செயல்பட வேண்டும். ஆனால் நமது அணி ஒலிம்பிக் மற்றும் உலக போட்டிகளில் சாம்பியனாக இருந்துள்ளதால் நமக்கு எதிராக எல்லா அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடும். முதல் லீக் ஆட்டத்தில் நாம் நியூசிலாந்தையும், அடுத்து ஆஸ்திரேலியாவையும் சந்திக்க இருக்கிறோம். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாம் 80 சதவீதம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் நன்றாக ஆடி வருகிறோம். புரோ லீக் தொடரில் 3 மாதத்துக்கு முன்பு அர்ஜென்டினாவை நமது அணி வீழ்த்தி இருக்கிறது. ஸ்பெயின் அணியை கடைசி 2 ஆண்டுகளில் நாம் சந்தித்ததில்லை. கடைசியில் ஜப்பானை எதிர்கொள்ள இருக்கிறோம். ஒலிம்பிக்கில் போட்டி சற்று வித்தியாசமாக இருக்கும். எனவே முந்தைய செயல்பாடுகளை நினைத்து எந்த அணியையும் எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது.

போட்டியில் கிடைக்கும் வாய்ப்புகளில் கோல் அடிப்பதில் நேர்த்தியாக செயல்பட வேண்டும், பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்க மாற்றுவதில் கோட்டை எதுவும் விடக்கூடாது. அதிக தவறு இழைக்கக்கூடாது. மஞ்சள், பச்சை அட்டை வாங்காத வகையில் செயல்பட வேண்டும். கோல் வாங்கினாலும், அசராமல் பதிலடி கொடுக்கும் வகையில் தங்களது திட்டத்தை செயல்படுத்த வேண்டும். லீக் சுற்றில் நாம் தடுமாற்றமின்றி வெற்றிகளை குவித்து முன்னேற வேண்டியது முக்கியமாகும். லீக் சுற்றில் முதலிடம் பிடித்தால் ‘நாக்-அவுட்’ சுற்று அட்டவணை எளிதாக அமையும்.

நமது அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அருமையாக தயாராகி இருக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது 75 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நல்ல முடிவை பெற முடியும். கடந்த ஒலிம்பிக்கில் மெத்தனமாக செயல்பட்டதும், அதிக தவறுகள் இழைத்ததும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுபோல் இல்லாமல் வீரர்கள் தவறு இழைக்காமல் தங்களது திறமையை வெளிபடுத்தினால் நம்மால் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story