பெண்கள் ஆக்கியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது இந்தியா


பெண்கள் ஆக்கியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது இந்தியா
x
தினத்தந்தி 2 Aug 2021 10:29 PM GMT (Updated: 2021-08-03T03:59:50+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஆக்கியில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 3 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக 3 தோல்வியை சந்தித்ததுடன், கடைசி 2 ஆட்டங்களில் அடுத்தடுத்து அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளை தட்டுத்தடுமாறி வீழ்த்தி ‘ஏ’ பிரிவில் 4-வது இடத்தை பிடித்து இந்திய அணி கால்இறுதிக்குள் நுழைந்தது. வலுவான ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்கள் அனைத்திலும் அபார வெற்றி பெற்று ‘பி’ பிரிவில் முதலிடத்துடன் கம்பீரமாக கால்இறுதிக்குள் கால்பதித்தது.

இதனால் கால்இறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் இறுதி வரை போராடிய இந்திய மங்கைகள், ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுதலையும் அள்ளினார்கள்.

விறுவிறுப்பான இந்த மோதலில் ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக தாக்குதல் பாணியை தொடுத்தது. முதலில் சற்று நேரம் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய இந்திய அணியினர் அடுத்து தங்களது தாக்குதல் வேகத்தை தீவிரப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு அச்சம் அளிக்கும் வகையில் அவர்களது கோல் எல்லையை முற்றுகையிட்டனர்.

20-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு முதலாவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. அதனை பயன்படுத்தி அந்த அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு இந்திய அணியினர் முட்டுக்கட்டை போட்டனர். 22-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு முதல் பெனால்டி கார்னர் கிடைத்தது. அதனை இந்திய அணி வீராங்கனை குர்ஜித் கவுர் கோலாக்கி அசத்தினார். எனவே இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியினர் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நின்றனர். இதன் பலனாக அந்த அணிக்கு அடுத்தடுத்து 3 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. ஆனால் அவர்களின் சவாலை இந்திய அணியின் கோல்கீப்பர் சவிதாவும், பின்கள வீராங்கனைகளும் அபாரமாக செயல்பட்டு முறியடித்தனர்.

கடைசி 10 நிமிடங்களில் இந்திய அணியின் கோல் எல்லை பகுதியை சுற்றியே பந்து வலம் வந்தது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கடுமையாக நெருக்கடி கொடுத்ததுடன் 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் பெற்றனர். ஆனால் அதனை கோலாக்க எடுத்த முயற்சியை இந்திய வீராங்கனைகள் தங்களது நேர்த்தியான தடுப்பு யுக்தியால் சமாளித்தனர். பதில் கோல் திருப்ப ஆஸ்திரேலிய அணி பல்வேறு வியூகங்களுடன் மேற்கொண்ட போராட்டத்துக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. திரில்லிங்கான இந்த ஆட்டம் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணி ஒலிம்பிக் ஆக்கியில் பங்கேற்று இருப்பது இது 3-வது முறையாகும். 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பெண்கள் ஆக்கி அறிமுகமானது. 6 அணிகள் பங்கேற்ற அந்த போட்டியில் ரவுண்ட் ராபின் லீக் முடிவில் இந்தியா 4-வது இடம் பிடித்தது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருந்த இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

தற்போது 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு பயணித்திருக்கும் இந்திய அணி முதல்முறையாக அரைஇறுதியை எட்டி சரித்திரம் படைத்திருக்கிறது. வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்த இந்திய அணியினர் உணர்ச்சிபெருக்கால் ஆனந்த கண்ணீர் மல்க மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதே சமயம் தோல்வியை சந்தித்தது எப்படி என்பது புரியாமல் திகைத்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் மைதானத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து அழுதபடி வெளியேறினார்கள். ஆச்சரிய சாதனை நிகழ்த்திய இந்திய பெண்கள் அணியினருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.

நாளை (புதன்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கும். முன்னதாக நடந்த கால்இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை விரட்டியடித்தது.

Next Story